ஆன்லைன் மோசடி கும்பல் போலீசிடம் சிக்கியது : மேற்கு வங்கத்தில் தரமான சம்பவம்

வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து பேசுவதுபோல் நடித்து வங்கி கணக்கிலிருந்து பணம் மோசடி செய்த ஜார்கண்ட் மாநிலம், ஜம்தாராவைச் சேர்ந்த வாலிபர்கள் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் பெயரில் சென்னை, மத்திய குற்ற பிரிவு சைபர் கிரைம் பிரிவில் ஆள்மாறாட்டம், மோசடி, இணையவழியில் ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த விசாரணையில் மோசடி கும்பல் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக தனிப்படை போலிசார் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிற்கு விரைந்து சென்று கொல்கத்தா ஹவுரா நகரில் தங்கியிருந்த மோசடி கும்பலை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

அவர்களிடமிருந்து 20 மொபைல் போன்கள், 160 சிம்கார்டுகள், 19 வங்கி கணக்கு அட்டைகள், 4 ஸ்வைப்பிங் மிஷின்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் தங்க ஆபரணங்கள், ஹோன்டா சிட்டி கார், மோசடி மூலம் சேர்த்த பணம் ரூ.11,20,000/- ஆகியவற்றையும் பறிமுதல் செய்யப்பட்டது.

குற்றவாளிகள் மூவரும் இன்று 27.10.2021ம் தேதி சென்னைக்கு கொண்டு வரப்பட்டனர். விரைவில் இந்த மூவரும் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருக்கிறார்கள்.