‘தேள்’ திரை விமர்சனம்
தூத்துக்குடி, மதுரை சம்பவம், போடிநாயக்கனூர் கணேசன் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்த டான்ஸ் மாஸ்டர் ஹரிகுமார் முதல்முறையாக இயக்குனராக அறிமுகமாகும் படம்தான் ‘தேள்’.
இப்படத்தில் பிரபு தேவா, சம்யுக்தா ஹெக்டே, ஈஸ்வரி ராவ், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். சத்யா இசை அமைத்துள்ளார் விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தின் கதை
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வட்டிக்கு பணம் கொடுத்து வியாபாரிகளிடம் கொள்ளையடித்து வருகிறது ஒரு கும்பல். வட்டிக்கு பணம் தராத நபர்களை அடித்து அவர்களிடமிருந்து பணத்தை திருப்பி வாங்கும் அடிதடி வேலையை பிரபு தேவா செய்து வருகிறார்.
தனது தாயை மதிக்காமல் அடிதடியில் ஈடுபட்டு வரும் பிரபுதேவா திடீரென திருந்தி தனது தாயுடன் சேர்ந்து வாழ ஆரம்பிக்கிறார். ஆனால் பிரபுதேவாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் அவரை பழி வாங்க ஆரம்பிக்கின்றனர். ஒரு கட்டத்தில் தாய் ஒரு ட்விஸ்டை வைக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
பிரபு தேவா இப்படத்தில் ஸ்டண்ட் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்துள்ளார். ஈஸ்வரி ராவ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அம்மா சென்டிமென்ட் படங்கள் எத்தனையோ தமிழ் சினிமாவில் வந்திருந்தாலும் இந்தப் படம் முற்றிலும் வித்தியாசமானது.
கதாநாயகி சம்யுக்தா ஹெக்டேவுக்கு சொல்லும்படியான கதாபாத்திரம் இல்லை. சில காட்சிகளில் மட்டுமே வருகிறார். யோகி பாபு வழக்கம்போல் காமெடி காட்சிகளில் நிறைவு செய்கிறார்.
படத்தின் பின்னணி இசை ஓகே. பாடல்கள் சுமார் ரகம்தான். கவர்ச்சி + குத்தாட்டம் பாடல்களை நீக்கியிருக்கலாம்.
கடன் பிரச்சினையால் கஷ்டப்படுகிற பல குடும்பங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையில் பணத் தேவைக்காக குடும்பத்தில் ஒருவரை இழந்து தவிக்கும் உறவுகள் அவர்களது வலி, வேதனை என அனைத்தையும் சரியாக பதிவு செய்த இந்த “தேள்” படம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
