தீதும் நன்றும் திரை விமர்சனம்

அறிமுக இயக்குனர் ராசு ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம்தான் தீதும் நன்றும். படத்தில் ராசு ரஞ்சித், லிஜோமோல் ஜோஸ், அபர்ணா பாலமுரளி, ஈசன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் ரஞ்சித்தும் ஈசனும் சிறுவயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள். தாய் தந்தையை இழந்த இவர்கள் ஒரு மீன் மார்க்கெட்டில் வேலை செய்து வருகின்றனர். இரவு நேரங்களில் முகமூடி அணிந்து கொண்டு கொள்ளையில் ஈடுபடுகின்றனர். இவர்களோடு சந்தீப் என்பவரும் சேர்ந்து கொள்கிறார்.

இந்நிலையில் ஈசனும் அபர்ணா பாலமுரளியும் காதலிக்கின்றனர். அபர்னாவின் பெற்றோரின் சம்மதமில்லாமல் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். அதே போல் ராசு ரஞ்சித் லிஜோமோல் காதலித்து வருகின்றனர். இப்படி இவர்களது காதல் வாழ்க்கை நிம்மதியாக சென்று கொண்டிருக்கிறது.

ஒரு நாள் ராசு ரஞ்சித்தும் ஈசனும் கொள்ளையடிக்க வெளியே செல்கின்றனர். அப்போது ஈசனின் மனைவி தனது வயிற்றில் குழந்தை வளர்வதாக கூறி போக வேண்டாம் என அவரை தடுக்கிறார். ஆனால் அவரது பேச்சை கேட்காமல் நண்பர்களோடு சேர்ந்து ஒரு மதுக்கடையில் கொள்ளையடிக்கிறார்கள்.

இந்த கொள்ளையில் ராசி ரஞ்சித்தும் ஈசனும் போலீசில் மாட்டிக் கொள்கிறார்கள். பிறகு இருவரும் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று விடுகிறார்கள். அதன்பிறகு இவர்களின் வாழ்க்கை என்ன ஆனது? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

ராசு ரஞ்சித் இப்படத்தை இயக்கி நடித்துள்ளார். யதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார். அவரே இயக்குனர் என்பதால் அவருடைய கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், நேர்மையாக கதை சொல்லியிருக்கிறார்.

நண்பனாக வரும் ஈசனும் கதாபாத்திரத்திற்கு பொருந்தியிருக்கிறார். அபர்ணா, லிஜோமோல் இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர்.

சி சத்யாவின் பின்னனி இசை மற்றும் கெவின் ராஜ் அவர்களின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

படத்தில் இரவு நேர காட்சிகள் ஏராளம். அதற்காக கடுமையாக உழைத்து இருக்கிறார். எந்த வித சொதப்பலும் இல்லாமல் படம் விறுவிறுப்பாக செல்கிறது.