ட்ரிப் திரை விமர்சனம்

யோகி பாபு, கருணாகரன், பிரவீன், சுனைனா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். டென்னிஸ் மஞ்சுநாத் இந்த படத்தை இயக்கியுள்ளார். சித்து குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மலைப்பிரதேசம் பகுதியில் ஒரு ஜோடி காரில் பயணம் செய்கிறார்கள். அப்போது மர்ம மனிதன் ஒருவன் அவர்களை வழிமறித்து கொலை செய்கிறான். அதே காட்டுப்பகுதியில் சுனைனா தனது நண்பர்களுடன் சேர்ந்து சுற்றுலா செல்கிறார்கள். போகும் வழியில் இரத்தக்கரையில் இருக்கும் யோகிபாபு, கருணாகரனை பார்த்து பயப்படுகிறார்கள்.

யோகி பாபு, கருணாகரன் இருவரும் சேர்ந்து சுனைனாவை ஒரு வீட்டில் தங்க வைக்கின்றனர். சுனைனாவின் நண்பர்கள் அவர்களிடம் சிக்கிவிட்டதாக நினைத்து அவரை மீட்க முயற்சி செய்கின்றனர். சுனைனாவை தேடி வரும் நண்பர்கள் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்படுகிறார்கள்.

ரத்த வெறி பிடித்த மனித மாமிசம் சாப்பிடும் சிலர்தான் இந்த கொலைகளுக்கு காரணம் என தெரியவருகிறது. இறுதியில் சுனைனாவை நண்பர்கள் அனைவரும் காப்பாற்றினார்களா? அந்த மனிதர்களிடமிருந்து அனைவரும் தப்பினார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

நாயகியாக நடித்திருக்கும் சுனைனா, துறுதுறு பெண்ணாக நடித்து கவர்ந்திருக்கிறார்.அறிமுக நாயகன் பிரவீன் புதுமுகம் என்று தெரியாதளவிற்கு நடித்திருக்கிறார்.

யோகி பாபுவின் டைமிங் காமெடி படத்திற்கு பலம் சேர்க்கிறது. சீரியஸான காட்சிகளிலும் நம்மை சிரிக்க வைக்கிறார். ஒரு பழைய வீட்டை தேர்வு செய்து மொத்த படத்தையும் அந்த இடத்திலேயே முடித்திருக்கிறார்கள். 

முதல் பாதி கலகலப்பாகவும், இரண்டாம் பாதி திரில்லருடன் கலகலப்பையும் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத்.