இணைபிரியா நண்பர்கள்.. 40 வருட நட்பு.. இறப்பிலும் இணைபிரியவில்லை..!

தமிழ் சினிமாவில் பல படங்களில் இணைபிரியா நண்பர்களின் காட்சி படமாக்கப்பட்டிருக்கும், அதிலும் அவர்களின் நட்பு அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கும்.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது  உண்மையாக இது போல் யாராவது வாழ்வார்களா என பல நேரங்களில் நம் நினைத்திருப்போம். ஆனால் உண்மையான நட்புடன் வாழ்ந்திருக்கின்றோம் என்று இரு இணைபிரியா நண்பர்களின் வாழ்க்கை நிருபித்து காட்டியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஜுபிலி ரோட்டில் அல்லா கோவில் அருகே வசித்து வருபவர் மகாலிங்கம். இவர் அருகே உள்ள காளியம்மன் கோவிலில் பூசாரியாக உள்ளார். மேலும் இவர் சிறிய தேநீர் கடையும் நடத்தி வருகிறார். இவரது வீட்டிற்கு பக்கத்தில் வசித்து வருபவர் ஜெயிலா புதின்.

Advertisement

இவர் அதே பகுதியில் ரைஸ்மில் நடத்தி வருகிறார். 40 வருடங்களாக மகாலிங்கம் மற்றும் ஜெயிலா புதினும் இணைபிரியா நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவருமே உடல்நலக்குறைவால் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இருவரும் அருகருகே படுக்கையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் ஜெயிலா புதின் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மகாலிங்கமும் அடுத்த 10 நிமிடத்திற்குள் உயிரிழந்தார்.

இதுகுறித்து இருவரின் மகன்கள் கூறுகையில் ”நாங்களும் எங்கள் அப்பாவைப் போல் ஒற்றுமையாக இருப்போம், உற்றார் உறவினர் போல் சுப துக்க காரியங்களில் ஒன்றிணைந்து மதங்களை கடந்து,  நாங்கள் நட்புடன் தொடர்வோம். எங்களின் தந்தையின் ஆசையும் இது தான்”  எனத் தெரிவித்தனர்.