மீண்டும் இணையும் வெற்றிமாறன் சூரி.. ஆனால் இயக்குநர் அவதாரத்தில் இல்லை!

தற்பொழுது வெற்றிமாறன் இயக்கத்தில் பிரபல நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகர் சூரி இணைந்து நடித்து வெளியாகி உள்ள திரைப்படம் தான் விடுதலை. இதுவரை தனது சினிமா பயணத்தில் கூட்டத்தில் ஒருவராக, ஹீரோவின் நண்பராக, குணச்சித்திர நடிகராக பல இடங்களில் தோன்றி நடித்து மக்களை மகிழ்வித்து வந்தார் சூரி.
ஆனால் தற்பொழுது, தன்னைத் தானே செதுக்கிக் கொண்டு கதையின் நாயகனாக, அதிலும் ஆக்சன் ஹீரோவாக உருவெடுத்துள்ளார். உண்மையில் இது ஒரு அசாத்திய வளர்ச்சி என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
தொடக்கம் முதலே தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்த சூரியை மக்கள் மிக எளிதில் ஒரு ஆக்சன் ஹீரோவாக ஏற்றுக் கொண்டனர் என்று தான் கூற வேண்டும். இந்த படத்திற்காக அவர் மேற்கொண்ட அத்தனை உழைப்பும் வீண்போகவில்லை, அதற்கே ஒரு பலத்த கைதட்டல் கொடுக்கலாம்.
இந்நிலையில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக இருக்கிறது, இதை தாண்டி அடுத்து ஒரு படத்தில் மீண்டும் வெற்றிமாறன் மற்றும் சூரி ஆகியோர் இணைந்து பணியாற்ற உள்ளனர். ஆனால் இந்த முறை அவர் இயக்கவில்லை, மாறாக வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த துரை செந்தில்குமார் இந்த திரைப்படத்தை இயக்க உள்ளார்.
ஏற்கனவே எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, கொடி மற்றும் பட்டாஸ் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் தான் துரை செந்தில்குமார். இருப்பினும் புதிதாக உருவாகுள்ள இந்த திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதும் பணியை வெற்றிமாறன் மேற்கொள்வர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.