பொம்மைக்கு பாடைக்கட்டி செருப்பால் அடித்த மக்கள் : மழை வேண்டி வினோத வழிபாடு!

தமிழ்நாட்டில் மழைக்காலங்களில் மழை பெய்ய வேண்டி பல்வேறு சடங்குகள் நடைபெறும். இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே செக்காரக்குடி கிராமத்தில் வினோத வழிபாடு ஒன்று நடந்துள்ளது.

செக்காரக்குடி கிராமத்தில் பருவமழை பெய்ய வேண்டி மனித உருவத்தை வைக்கோல் மற்றும் செடிகளால் செய்து, அதற்கு சட்டை அணிவித்து, பாடை கட்டியுள்ளனர். பருவமழைக்கு தடையாக இருக்கும் கொடும்பாவியை துடைப்பம் மற்றும் செருப்பால் அடித்து, ஒப்பாரி பாடல் பாடி தெருக்கள் வழியாக சென்றனர்.
இறுதியில் ஊரின் வெளிப்பகுதியில் உள்ள சுடுக்காட்டில் கொண்டு இந்த கொடும்பாவி எரிக்கப்பட்டது. தொழிநுட்பத்தால் உலகம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் இது போன்ற மூட நம்பிக்கைகள் இன்றும் இருப்பது வேதனைக்குரியது.