நவரசா : ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ விமர்சனம்

ஒன்பது குறும்படங்களை கொண்ட நவராசா படத்தில் இடம்பெற்ற கிட்டார் கம்பி மேலே நின்று படத்தின் விமர்சனத்தை பார்ப்போம்.
சூர்யா, பிரயாகா மார்டின் இதில் நடித்துள்ளனர். இதனை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இசையமைப்பாளராக இருக்கும் சூர்யா லண்டனுக்கு சென்று பெரிய இசை மேதையாக மாற வேண்டும் என ஆசைப்படுகிறார். ஆனால் அவருடைய தாய் அவருடன் வர மறுப்பதால் சூர்யாவின் தன்னுடைய ஆசையை தள்ளி போட்டுக் கொண்டே வருகிறார். பிறகு சூர்யாவின் ஆசையை புரிந்து கொண்ட தாய் லண்டன் செல்ல சம்மதிக்கிறார்.
நாயகி பிரயாகாவுக்கு சூர்யாவின் இசையில் பாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. அவருடன் பேசி பழகும் சூர்யாவுக்கு அவரும் தன்னைப்போலவே லண்டன் சென்று இசையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதை அறிகிறார்.
இருவருக்கு இசை மீது ஆர்வம் இருப்பதால் மனம்விட்டு பேச ஆரம்பிக்கின்றனர். பிறகு இது காதலாக மாறுகிறது. இறுதியில் சூர்யா லண்டன் போனாரா? இல்லையா? இவர்களின் காதல் என்ன ஆனது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
சூர்யா இளமை ததும்பும் ரொமாண்டிக் ஹீரோவாக வருகிறார். சூர்யாவிற்கு பிரயாகாவிற்கும் இடையேயான காதல் காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைகிறது.
காதல் உணர்வை மையமாக வைத்து கௌதம் மேனன் இப்படத்தை இயக்கியுள்ளார். காதல் படம் எடுப்பதில் தான் ஒரு கிங் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். கார்த்திக்கின் பின்னணி இசை மற்றும் பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.