பெண் குழந்தைகளின் சமத்துவத்திற்கு சேவையாற்றியதற்காக ஆஸ்திரேலிய உயர் தூதராக ஒருநாள் பதவி

ஜார்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்களின் ஆதிக்கத்துக்கு இடையே பெண் கல்வி, பெண் சமத்துவம் போன்றவற்றுக்காக பாடுபடும் கிராமத்துப் பெண் ஆஸ்திரேலிய உயர் தூதராக ஒருநாள் மட்டும் பதவி வகித்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாரிசிங். 22 வயது இளம்பெண்ணான பாரி, நக்சலைட்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் வாழும் பெண் குழந்தைகளின் கல்வி, சமத்துவம், சுதந்திரம் மற்றும் அதிகாரத்துக்காக சேவையாற்றியதன் மூலம் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தார்.

மேலும், பெண்களின் பாதுகாப்பு மற்றும் ஆபத்தான சூழ்நிலைகளை சமாளிக்கும் யுக்தி, அவசர உதவி எண்கள் ஆகியவற்றையும் விளிம்பு நிலையில் உள்ள பெண்களுக்கு இவர் நினைவூட்டி வந்தார்.

Advertisement

இப்படி பல மாநிலங்களில் சமூகச்சேவையாற்றிய பெண்கள் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லியில் உள்ள 17 நாடுகளின் தூதரகத்தில் ஒருநாள் மட்டும் உயர் தூதராக பதவி ஏற்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அவ்வகையில், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பாரி சிங், ஆஸ்திரேலிய உயர் தூதராக அவரது பணிகளை ஒருநாள் மட்டும் கவனித்தார். இந்த கவுரவத்துக்கு பின்னர் வீடு திரும்பிய பாரிசிங்கை அவரது பகுதியில் வசிக்கும் மக்கள் மாலையணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.