கரிசலாங்கண்ணி கீரை வளமான பூமியில் மட்டுமே நன்றாக விளையும். இதில் இரு வகைகள் உண்டு. மஞ்சள் கரிசலாங்கண்ணி மற்றும் வெள்ளை கரிசலாங்கண்ணி, மஞ்சள் கரிசலாங்கண்ணியைத்தான் சமைத்து சாப்பிடலாம். இதுதான் சமையலுக்கான ஏற்றது. நாட்டு வைத்தியத்தில் பெரும் பயனைத் தருவது இக்கீரை மஞ்சள் காமாலையைப் போக்குவதில் பெரும் பங்காற்றுகிறது
கரிசலாங்கண்ணிக் கீரையில் (karisalankanni) இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, கால்சியம், பாஸ்பரஸ், மணிச்சத்து, சுண்ணாம்புச் சத்து, தாது உப்பு, மாவுச்சத்து, புரதம் போன்ற சத்துக்களும், எக்லிப்டால், வெடிலோலாக்டோன், டெஸ்மீத்தைல், ஸ்டிக்மாஸ்டீரால், ஹெப்டாகோசனால், ஹென்ட்ரை அக்கோன்டனால் போன்ற வேதிப்பொருட்களும் காணப்படுகின்றன.
100 கிராம் கரிசலாங்கண்ணி இலைச்சாற்றில் உள்ள சத்துகள்.
- நீர்=85%
- மாவுப்பொருள்=9.2%
- புரதம்=4.4%
- கொழுப்பு=0.8%
- கால்சியம்=62 யூனிட்
- இரும்புத் தாது=8.9 யூனிட்
- பாஸ்பரஸ்=4.62%
கரிசலாங்கண்ணி கீரையின் மருத்துவப் பயன்கள்
கரிசலாங்கண்ணி மிகச் சிறந்த கிருமி நாசினியாக பயன்படுகிறது. அழுகும் நிலையில் உள்ள புண்கள், வெட்டுக் காயங்களுக்கு கரிசலாங்கண்ணி இலையை அரைத்து, சாறு எடுத்து தடவினால், புண்கள் மிக விரைவில் ஆறிவிடும்.
மஞ்சள் காமாலை போக
கரிசலாங்கண்ணிக் கீரையை அரைத்து சாறெடுத்து மோரில் கலந்து மூன்று வேளை கொடுத்தால் போதும் குழந்தைகளின் மஞ்சள் காமாலை போகும்.
பல் சம்பந்தமான நோய்கள் நீங்க
பல் வியாதிகள் கஷ்டப்படுகிறவர்கள், காலை வேளையில் கரிசலாங்கண்ணி இலையை வாயில் போட்டு நன்றாக மென்று அதைக் கொண்டு பல் துலக்கி வந்தால், பல் நோய்கள் குணமாகும். வாய் துர்நாற்றம் போகும்
குடல் சுத்தமாக
கரிசலாங்கண்ணிக் கீரையை வாரத்திற்கு இருமுறை சாப்பிட்டு வந்தால், குடலில் ஏற்படும் தேவையற்ற கசடுகளை வெளியேற்றும். குடலிலுள்ள கிருமிகள் சாகும். குடல் சுத்தமாகி மலச்சிக்கல் நீங்கும். மேலும் அஜீரணம், வயிறு சம்பந்தமான பிரச்சனை ஆகியவற்றையும் போக்கும்.
புத்தி தெளிவடைய
எவ்வளவு படித்தாலும் மண்டையில் ஏறவில்லை என்று கஷ்டப்படுபவர்கள், மறதிகாரர்களும், வாரத்திற்கு மூன்று நாட்கள் வீதம் இரண்டு மாதங்கள் நெய், பாசிப்பருப்புடன் கலந்து பொரியல் செய்து இக்கீரையை சாப்பிட்டு வந்தால் புத்தி தெளிவடையும். மறதி போகும்
காது வலி தீர
கரிசலாங்கண்ணிக் கீரைச் சாற்றில் சில துளிகளை காதில் விட காது வலி தீரும். நல்ல தூக்கம் வரும்.
மது அருந்துபவர்களுக்கு
மது உடலுக்கு உயிருக்குக் கேடு என்று தெரிந்தும் பலர் தினமும் தங்களின் அரிய உடலை நாசமாக்கிக் கொள்கிறார்கள். மது தினமும் அருந்துவதால் ஈரல் கெட்டு உயிர் போகும்.
குடியில் கெட்டுப்போகும் ஈரலை சரிசெய்கிறது கரிசலாங்கண்ணி, எனவே நிறுத்தியவர்கள் தினமும் காலையில் இக்கீரையைச் சமைத்து சாப்பிட்டுவந்தாலோ அல்லது சாறு பிழிந்து பருகி வந்தாலோ கெட்டுப் போன ஈரல் நல்ல நிலைமைக்கு மாறும்.
பற்களில் மஞ்சள் நிறமா
சிலருக்கு பற்கள் மஞ்சள் நிறமாக, பார்க்க அழகற்று இருக்கும். இப்படிப்பட்டவர்கள், கரிசலாங்கண்ணியின் வேரைக் கொண்டு பல் துலக்குவது, பல் துலக்கிய பின் கீரையை ஒரு பிடி எடுத்து மென்று தின்று ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தி வரவும் நாளடைவில் பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் கறை மறைந்தே போய்விடும்.
குழந்தைகளுக்கு
கரிசலாங்கண்ணிச்சாறு இரண்டு சொட்டில் எட்டு சொட்டு தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சளித்தொல்லை நீங்கிவிடும்.
நீரிழிவு நோயை விரட்ட
நீரிழிவு நோயாளிகள் கட்டாயமாக எடுத்துக்கொள்ள வேண்டிய கீரை கரிசலாங்கண்ணி தான். இது உடலில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். சர்க்கரை நோயினால் ஏற்படும் பாதிப்பையும் கட்டுப்படுத்தும். இக்கீரையை நன்கு நீரில் அலசி, சின்ன வெங்காயம் சேர்த்து கொஞ்சம் நீர்விட்டு அவித்து கொஞ்சம் நேரம் அதனை ஊறவைத்து சாப்பிட வேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை சாப்பிட்டு வேண்டும்.
கண் ஆரோக்கியம்
கரிசலாங்கண்ணி கண் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். கண் பார்வை நரம்புகளை பலப்படுத்தி கண் வறட்சியைப் போக்கும். புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும். கரிசலாங்கண்ணி நரம்பு தளர்ச்சியை போக்கும்.
கரிப்பான் இலை, மிளகு போன்றவற்றை நன்கு அரைத்து கொதிக்க வைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து வெந்நீரில் குளித்து வந்தால் கண் சமபந்தமான நோய்கள் குறையும். கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்ற குறைபாடும் குணமாக்கும்.
சுவாசம் சீராகும்
இருமல், ஆஸ்துமா போன்ற பாதிப்பு உள்ளவர்கள் கரிசலாங்கண்ணி பொடியுடன், திப்பிலி சூரணம் சேர்த்து தினமும் ஒருவேளை என ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் சுவாச நோய்கள் தீரும். இரத்தத்தை சுத்தப்படுத்தும். மேலும், சுவாச சிக்கல்கள் தீர கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சேர்த்து கஷாயம் செய்து குடித்து வர குணமாகும்.
மேலும் சில மருத்துவ குணங்கள்
கல்லீரல் செயல்பாட்டின் குறைவினால் ஏற்படும் இரத்த சோகை நோய்க்கு கரிசலாங்கண்ணிச்சாற்றை 100 மில்லியளவு தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் சில தினங்களில் இரத்த சோகை நீங்கி விடும்.
கரிசிலாங்கண்ணி இதய அடைப்பை நீக்கி இதயத்தை சீராக செயல்பட வைக்கும். மேலும் சிறுநீரகத்தைப் பலப்படுத்தும். மஞ்சள் காமாலை, சிறுநீர் எரிச்சல் ஆகியவற்றுக்கு கரிசலாங்கண்ணி சிறந்த மருந்து.
கரிசலாங்கண்ணிக் கீரையை சாப்பிடுவதால் காய்ச்சல், யானைக்கால், விஷக்கடி, காது வலி, இலதோஷம், கண் பார்வை மங்கல், மார்பு வலி, மஞ்சள் காமாலை, தொழுநோய், மயக்கம், பித்த சுரம், பித்த எரிச்சல், மலச்சிக்கல், சளி, இரத்த சோகை, தலை பொடுகு, இளநரை, பசியின்மை, வீக்கம் இரத்தப்போக்கு மூலம் வயிற்றுப்போக்கு, வாய் துர்நாற்றம், புண்கள், வாதம், கல்லீரல் போன்ற நோய்கள் தீரும்.