Connect with us

Health Tips in Tamil, Tamil Health Tips

மதுரை கூடலழகர் திருக்கோயில் வரலாறு

ஆன்மிகம்

மதுரை கூடலழகர் திருக்கோயில் வரலாறு

ஊர் -மதுரை

மாவட்டம் -மதுரை

மாநிலம் -தமிழ்நாடு

மூலவர் -கூடலழகர்

தாயார் -மதுரவல்லி, மரகதவல்லி, வகுளவல்லி, வரகுணவல்லி.

தீர்த்தம் -ஹேம புஷ்கரிணி.

தலவிருட்சம்– கதலி

திருவிழா -வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி

திறக்கும் நேரம் -காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை

தல வரலாறு

பிரம்மாவின் மகனான சனத்குமாரருக்கு ,பெருமாளை மனித ரூபத்தில் தரிசிக்க வேண்டும் என எண்ணம் தோன்றியது .எனவே இத்தலத்தில் பெருமாளை வேண்டி தவமிருந்தார். பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அவருக்கு காட்சி கொடுத்தார். சனத்குமாரர் தேவசிற்பியான விஸ்வகர்மாவை அழைத்து தான் கண்ட காட்சியை அப்படியே வடிவமைக்க செய்தார் அதன் பின் அழகிய அஷ்டாங்க விமானத்தின் கீழ் பிரதிஷ்டை செய்தார். அவரே கூடலழகர் எனப்பட்டார். இத்தலம் கிருதயுகத்திலேயே அமைக்கப்பட்டது. கிருதயுகம், திரேதா யுகம் ,துவாபரயுகம் ,கலியுகம் என நான்கு யுகங்களிலும் சிறப்பாக விளங்குகிறது .எனவே இத்தல பெருமாள் யுகம் கண்ட பெருமாள் என அழைக்கப்படுகிறார்.

பெருமாளின் 108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று உலகிலுள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் அதிகாலையில் பாடப்படும் “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு” என்று திருப்பல்லாண்டு பாடல் இயற்றப்பட்ட தலம் மதுரை .இவ்வூரில் “கூடலழகர்” என்ற பெயரில் பெருமாள் அருளுகிறார். மார்கழி மாதத்தில் இத்தலத்தை தரிசிப்பது சிறப்பு.

பெருமாள் கோவில்களில் 96 வகையான விமானங்கள் அமைக்கப்படும் இதில் அஷ்டாங்க விமானம் மிகவும் புண்ணியம் தருவதாகக் கருதப்படுகிறது .108 திவ்ய தேசங்களில் இங்கும் திருக்கோஷ்டியூரில் மட்டுமே சுவாமி அஷ்டாங்க விமானத்தின் கீழ் காட்சி தருகிறார் .இந்த விமானம் 125 அடி உயரம் கொண்டது பஞ்சபூத தத்துவங்களை உணர்த்தும் வகையில் ஐந்து கலசங்களுடன் கூடிய ஐந்து நிலை ராஜகோபுரம் உடையது. இதிலுள்ள கலசம் 10 அடி உயரமுடையது இதன் நிழல் தரையில் விழுவதில்லை.

மூன்று நிலைகளுடன் எட்டு பகுதிகளாக உயர்ந்து நிற்கும் இந்த விமானம் “ஓம் நமோ நாராயணாய” என்ற எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாகும். இங்குள்ள உற்சவர் வியூக சௌந்தரராஜன் என்று அழைக்கப்படுகிறார் .இப்பகுதியை ஆண்ட மன்னர்கள் போர் புரியச் செல்லும் முன்பு இவரை வேண்டி வெற்றிக்காக வியூகம் அமைத்துக் கொண்டனர். இதனால் இப்பெயர் ஏற்பட்டதாக சொல்வதுண்டு.

பாண்டிய மன்னனான சத்தியவிரதன் இத்தல பெருமாள் மீது அதிக பக்தி கொண்டான் ஒரு முறை அவன் கிருதுமால் நதியில் நீராடிய போது பெருமாள் மீன் வடிவில் தோன்றி உபதேசம் செய்தார். தனக்கு அருளிய சுவாமியின் நினைவாக மீன் சின்னத்தை வைத்துக்கொண்டான். எனவே பாண்டிய மன்னர்களின் சின்னமாக மீன் விளங்கியது.

இத்தலம் நான்மாடக்கூடல் என்றும் ,கூடல் மாநகர் என்றும்பெயர் பெற்றது. சுவாமி கூடலழகர் என்ற பெயரும் பெற்றார். இத்தல பெருமாள் “துவரைக் கோமான்” என்ற பெயரில் மதுரை தமிழ்ச்சங்கத்தில் புலவராக அமர்ந்து இருந்ததாக பரிபாடல் கூறுகிறது .எனவே இவரை “புலவர் கூடலழகர் “என்றும் சிறப்பித்து சொல்லப்படுகிறது.

மேலும் அனைத்து 108 திவ்ய தேசங்கள் வைணவத் தலங்களின் வரலாற்றை இங்கு அறிந்து கொள்ளலாம்.

More in ஆன்மிகம்

Advertisement
Advertisement
To Top