“நீ பெண்குலத்தின் பெருமை”.. மாணவி நந்தினிக்கு தங்க பேணா பரிசளித்த கவிப்பேரரசு!

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் நடந்து முடியும் பொழுது பல சின்னஞ்சிறு இதயங்களில், மிகப்பெரிய கனவுகள் முளைக்க துவங்குகிறது என்று தான் கூறவேண்டும். அந்த வகையில் தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி துவங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடந்து முடிந்தது 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு.
இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த மே 8ம் தேதி வெளியான நிலையில், திண்டுக்கல் பகுதியை சேர்ந்த நந்தினி என்ற மாணவி 600க்கு 600 மதிப்பெண் எடுத்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொருளியல் பாட பிரிவில் படித்து வந்த மாணவி தான் நந்தினி.
பொழுதுபோக்குகளில் பெரிதும் ஈடுபாடு காட்டாமல், முழு நேரமும் என் குடும்பத்தின் உயர்வை எண்ணி படித்ததே என் வெற்றிக்கு காரணம் என்று கூறியுள்ளார் அவர். முதல்வர் ஸ்டாலின் துவங்கி பல்வேறு அரசியல் தலைவர்களும், திரைத்துறை நடிகர், நடிகைகளும் இன்னும் பல மக்களும் தொடர்ந்து நந்தினிக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து, மாணவி நந்தியை நேரில் சந்தித்து அவர் வைத்திருந்த ஒரு தங்க பேனாவை நந்தினிக்கு பரிசளித்துள்ளார். இது குறித்த ஒரு தகவலையும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.