பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள்

இந்திய சமையல் கலையில் பெருங்காயத்திற்கு தனி இடம் உண்டு. பெருங்காயத்தை சாம்பார், ரசம், ஊறுகாய் என சைவ உணவுகளில் அதிகம் சேர்க்கப்படுகிறது. பெருங்காயத்தில் மருத்துவ குணங்கள் உண்டு.

நல்ல தரமான பெருங்காயம் வெளிரிய மஞ்சள் பழுப்பு நிறத்தில் இருக்கும். பெருங்காயத்தின் மணம் எளிதில் போய்விடும் என்பதால் அதனை காற்றுப்புகாத கண்ணாடி குவளையில் போட்டு வைக்க வேண்டும். இப்படி செய்தால் அதன் மணத்தையும் அதிலுள்ள மருத்துவ குணங்களையும் பாதுகாக்கலாம்.

செரிமான பிரச்சனை

பெருங்காயம் செரிமானத்திற்கு சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. பெருங்காயம் உணவில் சேர்த்துக்கொண்டால் வயிற்று வலி, வாயு பிரச்சனை, குடல் புழுக்கள், வயிற்றுப் பொருமல், குடல் புண்கள் போன்ற வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நீக்கி செரிமான கோளாறுகளை சரி செய்யும்.

மாதவிடாய் பிரச்சனை

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி, சதை பிடிப்பு, ஒழுங்கற்ற மாதவிலக்கு, சூதக வாய்வு போன்ற பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் கிடைக்க பெருங்காயம் உதவுகிறது.

கர்ப்பிணிகள்

பெருங்காயத்தை கர்ப்பிணிகள் அதிகம் சேர்க்கக்கூடாது. குழந்தை பிறந்த பிறகு கர்ப்பப்பையிலிருந்து “லோசியா” என்ற திரவம் வெளிப்படும். அது முழுமையாக வெளியேறுவதற்கு பெருங்காயத்தை பொரித்து அதோடு வெள்ளைப் பூண்டு, பனை வெல்லம் சேர்த்து பிரசவித்த முதல் 5 நாட்களுக்கு காலையில் கொடுக்க வேண்டும்.

வறட்டு இருமல்

பெருங்காயத்துடன் இஞ்சி மற்றும் தேன் கலந்து குடித்தால், வறட்டு இருமல், ஆஸ்துமா, மார்புச் சளி போன்றவைகள் குணமாகும்.

சர்க்கரை நோய்

பெருங்காயம் சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. இது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்க உதவும். பாகற்காய் சமையலில் பெருங்காயத்தை சேர்த்து சாப்பிடலாம்.

Recent Post