‘பிளான் பண்ணி பண்ணனும்’ திரை விமர்சனம்
பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் பிக்பாஸ் பிரபலம் ரியோ நாயகனாக நடித்துள்ள படம் ‘பிளான் பண்ணி பண்ணனும்’. இப்படத்தில் ரம்யா நம்பீசன், பால சரவணன், ரோபோ ஷங்கர், தங்கதுரை, எம்.எஸ் பாஸ்கர், முனீஸ்காந்த் ஆகியோர் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ரியோவும் பால சரவணாவும் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இருவரும் தங்களின் குடும்பத்துடன் சென்னையில் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். தங்கள் அலுவலகம் சார்பாக பார்ட்டி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்கிறார்கள். இதற்காக சினிமா நடிகை ஒருவரைச் சிறப்பு விருந்தினராக அழைக்கின்றனர்.
இந்நிலையில் அவருக்குத் தரவேண்டிய பணம் காணாமல் போகிறது. அதே நேரத்தில் நாயகனின் நண்பனின் தங்கையும் காணாமல் போகிறார். இரண்டையும் தேடிச் செல்லும் இவர்கள் அடுத்தடுத்து சந்திக்கும் பிரச்னைகளும், அரங்கேறும் காமெடிகளும்தான் படத்தின் கதை.
செம்பி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரியோ ராஜ் தனது வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடம்தான். அவர் எடுக்கும் முடிவுகள் கதையை நகர்த்திச் செல்கின்றன. பால சரவணன், ரோபோ சங்கர் ஒரு சில இடங்களில் சிரிக்கவைக்கின்றனர்.
படம் முழுவதும் லாஜிக்கில்லா காமெடியாக செல்கிறது. ஆடுகளம் நரேனுக்கு மட்டுமே இதில் முக்கிய வேடம். வில்லனாகக் காட்டப்படும் மாரிமுத்து கடைசியில் என்னவானார் என்றே தெரியவில்லை. உருவக்கேலிகள், பெண்களை இழிவுப் பேசும் காமெடிகளை தவிர்த்திருக்கலாம்.
மொத்தத்தில் இன்னும் கொஞ்சம் பிளான் பண்ணி எடுத்திருக்கலாம்.
