இது வேற லெவல் காம்பினேஷன்.. செல்வராகவனுடன் இணையும் 2 டக்கர் நடிகர்கள்!

கடந்த 2002ம் ஆண்டு வெளியான “துள்ளுவதோ இளமை” படம் துவங்கி இதுவரை 11 திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்ட மாபெரும் இயக்குநர் தான் செல்வராகவன். கடந்த 21 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து வருகிறார்.
இவர் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் என்று அனைத்து படங்களுமே தனித்துவம் வாய்ந்த கதை கலத்தைக் கொண்ட திரைப்படங்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
கடைசியாக செல்வராகவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தனுஷ் நடிப்பில் வெளியான நானே வருவேன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்ற ஆண்டு நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளியான தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படத்தில் இவர் நடிகராகவும் அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து சாணிக் காகிதம், நானே வருவேன், பகாசுரன் மற்றும் விரைவில் வெளியாகவிருக்கும் மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் இவருடைய அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
புதுமுக இயக்குநர் ரங்கநாதன் என்பவர் படத்தை இயக்க, செல்வராகவன் மற்றும் பிரபல நடிகர்கள் யோகி பாபு மற்றும் சுனில் ஆகிய மூவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு எதிர்வரும் ஜூன் மாதம் துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.