Search
Search

சிங்கப்பூர் லயன் சித்தி விநாயகர் கோவில் வரலாறு

கி.பி. 1820-ம் ஆண்டு சிங்கப்பூரில் நகரத்தார் குடியேறத் தொடங்கினர். கி.பி.1859-ம் ஆண்டு முதன்முதலாக தண்டாயுதபாணி கோவில் கட்டப்பட்டது. அதன் பிறகு கி.பி. 1925-ம் ஆண்டு லயன் சித்தி விநாயகர் கோவில் கட்டப்பட்டது.

இந்தக் கோவிலில் மூன்று விநாயகர் விக்கிரகங்கள் உள்ளது. அதில் லயன் சித்தி விநாயகர் மூலவிக்கிரகமாக காட்சி தருகிறார். சிங்கப்பூர் நகரில் கி.பி. 1925-ம் ஆண்டு இந்தக் கோவில் எழுப்பப்பட்டபோது பிரிட்டிஷ் – இந்திய ராணுவத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர், மூல விக்கிரகத்தை நகரத்தாரிடம் ஒப்படைத்தார்.

அவரிடம் தந்த வாக்குறுதியின்படி இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட புதிய கருங்கல் விக்கிரகத்தை அவர் வழங்கிய சிலையோடு பிரதிஷ்டை செய்தனர். ‘சிப்பாய் லயன்’ என்ற குடியிருப்புப் பகுதியில் இருந்து வந்த விநாயகர் என்பதால், இவருக்கு ‘லயன் சித்தி விநாயகர்’ எனப் பெயர் ஏற்பட்டது.

1975 மற்றும் 1989-ம் ஆண்டுகளில் ஆலயம் மறு சீரமைக்கப்பட்டது. அதன் பிறகு 2007 ம் ஆண்டில் ஆலயத்தின் மூன்றாவது கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இக்கோவிலில் பெரிய சுற்று மண்டபம், பல்நோக்கு அரங்கம், ஊழியர் தங்குமிடம் உள்ளது. கோவிலின் ஐந்து நிலை ராஜகோபுரம் எழிலாக காட்சி தருகிறது.

தமிழ்ப் பள்ளிகள் நடத்துதல், மாணவர்களுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்குதல், மருத்துவ முகாம்கள், அன்னதானம், தேவார வகுப்புகள் என சமூகச் சேவைகளை இந்த ஆலயத்தின் நிர்வாகம் செய்து வருகிறது.

விநாயகர் சதுர்த்தியும், தைப்பூசமும் மிகவும் முக்கிய விழாக்களாக இந்த ஆலயத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இந்த ஆலயத்தில் இருக்கும் லயன் சித்தி விநாயகர் இருந்து வருகிறது. இவரை 108 முறை வலம் வந்து வழிபட்டு வந்தால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.

தண்டாயுதபாணி ஆலயமும் லயன் சித்தி விநாயகர் ஆலயமும் நகரத்தார் சமூகத்தினரால் நல்ல முறையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

திறக்கும் நேரம் : தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

சிங்கப்பூரின் சைனா டவுன் பகுதியில் உள்ள கியோங் செய்க் சாலை மற்றும் கிரேத்தா ஆயர் சாலை சந்திப்பில் லயன் சித்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இதன் அருகில் ஊட்டரம்பார்க் மெட்ரோ மற்றும் சைனா மெட்ரோ ரெயில் நிலையங்கள் உள்ளன.

You May Also Like