“என்றும் உங்கள் குரல் எங்கள் மனதில்” – ராக்ஸ்டார் ரமணி அம்மாள் காலமானார்

ராக்ஸ்டார் ரமணியம்மாள் பற்றி தெரியாதவர்கள் இல்லை என்று கூறலாம், திரைத்துறையில் கடந்த 2004ம் ஆண்டு காதல் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் இவர். அதன் பிறகு காத்தவராயன் என்ற திரைப்படத்திலும் ஹரிதாஸ் என்ற படத்திலும் பாடல்களை பாடினார்.
ஆனால் அதன் பிறகு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் வீட்டு வேலை செய்ய தொடங்கினார் ரமணியம்மாள். இந்நிலையில் தான் 2018ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான ச ரி க ம ப என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அங்கு தான் அவருக்கு ராக் ஸ்டார் என்ற பட்டம் வழங்கப்பட்டது, அந்த அளவிற்கு இவருடைய குரல் மிகவும் பிரபலம். இளசுகளுக்கு இணையாக அந்த 64 வயது பாடகியும் பல பாடல்களை பாடி அசத்தினார்.
ஜூங்கா, சண்டைக்கோழி 2, காப்பான் மற்றும் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா போன்ற பல படங்களில் பாடியவர், இலங்கை, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு மேடைக்கச்சேரிகளுக்கும் சென்று வந்தார்.
இந்நிலையில் கடந்த ஓராண்டு காலமாகவே உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரமணியம்மாள் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்களும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.