வெயில் காலத்துக்கு ஏற்ற அலங்காரம்

பருவங்கள் மாறுவது போல, பருவத்துக்குப் பருவம் அலங்காரமும் மாற வேண்டும். அப்பொழுது தான் பொருத்தமாக இருக்கும்.

வெயில் காலத்துக்கு ஏற்ற அலங்காரம் செய்து கொண்டால்தான் நீங்கள் அழகோடு தோன்றுவதுடன், உங்களுக்கு வசதியாகவும் இருக்கும்.

வெயில் காலத்தில் எளிய அலங்காரமே அழகு தரும். மிகத் தீவிரமாக செய்து கொள்ளும் அலங்காரம் எடுபடாது. அதோடு நமக்கே சில நேரத்தில் சிரமமாகவும் தோன்றும்.

வெயில் காலத்தில் முதலாவதாக செய்ய வேண்டியது, காலை-மாலை இரு முறையும் குளிப்பதுதான். இதனால், உடல் வியர்வை நாற்றம் இல்லாமல், சுத்தமாக இருப்பதுடன் குளிர்ச்சியாகவும் இருக்கும்.

குளித்ததும், கழுத்து, முதுகு, மார்பு முதலிய இடங்களில் சிறிது பவுடரை அள்ளி பூசிக்கொள்ளுங்கள். வியர்க்காமல் இதமாக இருக்கும்.

மாலை நேரத்திலும் அதிக அலங்காரம் தேவையில்லை. முகத்தில் சிறிது பவுடர் பூசிக்கொண்டாலே போதும்.

உடையில் அதிகக் கவனம் செலுத்துங்கள். வெயில் காலத்துக்கு பருத்தி ஆடைகளே நல்லது. நைலான் போன்ற செயற்கை நூல் ஆடைகளை அணிந்தால் காற்றோட்டம் இருக்காது.

உடைகளைத் தேர்ந்தெடுக்கும் பொழுது, நிறத்தையும் கவனிக்க வேண்டும். வெளுத்த – இளம் நிறங்களே வெயில் காலத்துக்கு ஏற்றவை.

வீட்டில் கூடியவரை குளிர்ச்சியாக இருங்கள். வியர்க்க இடம் கொடுக்காதீர்கள். வியர்த்தால் களைப்பு அடைந்தவர் போலக் காணப்படுவார்கள்.

வெயிலில் வெளியே செல்லாதீர்கள். வெளியில் செல்ல நேர்ந்தால் குடையை எடுத்துச் செல்லுங்கள். குறிப்பாக, கருப்பு வண்ணக் குடையை உபயோகிக்க வேண்டாம்.

Recent Post