நெய் பாரம்பரியமாக நமது இந்திய சமையலிலும், ஆயுர்வேத மருத்துவத்திலும் உடல் நலனுக்காகவும், சுவைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே போன்றவற்றை உள்ளடக்கிய இது நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க செய்யும்.
நெய்யில் பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் சில உணவுகளுடன் நெய் சேரும்போது அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அப்படி நெய் உடன் சேர்க்க கூடாத உணவுகள் என்ன என்பதை பார்ப்போம்.
நெய்யுடன் தேன்
ஆயுர்வேதத்தின் படி, நெய்யையும் தேனையும் சம அளவில் கலப்பது உடலுக்கு நச்சுத்தன்மை ஏற்படுத்தும். நெய் மற்றும் தேன் இரண்டையும் சம அளவில் கலப்பது செரிமானத்தை கெடுத்து, நீண்ட கால உடல் உபாதைகளுக்கு வழி வகுக்கும். எனவே, நெய்யையும் தேனையும் சம அளவில் கலப்பதை தவிர்க்க வேண்டும்.
நெய்யுடன் தயிர்
தயிர் மற்றும் நெய் இரண்டும் ஆரோக்கியமான உணவுகள்தான். ஆனால், இரண்டும் வெவ்வேறு குணங்களை கொண்டவை. தயிர் புளிப்பாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும். நெய் இனிப்பாகவும் வெப்பமாகவும் இருக்கும். இவை இரண்டும் ஒன்று சேரும்போது அஜீரணம், வாயு மற்றும் வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகள் வரலாம்.
நெய்யுடன் சிட்ரஸ் பழங்கள்
நெய்யுடன் சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும். ஏனென்றால் இது சத்துக்கள் உடலில் சேர்வதை தடுக்கும். மேலும், செரிமான பிரச்சனைகளையும் உண்டாக்கும். இதனால், வயிற்று வலி, வாயு தொல்லை போன்ற உபாதைகள் வரலாம்.
நெய் மற்றும் மீன்
மீன் குளிர்ச்சியானது. நெய் உடலுக்கு வெப்பத்தை தரும். இவை இரண்டும் சேரும்போது உடலில் செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.
நெய் மற்றும் பொறித்த உணவுகள்
நெய்யுடன் பொறித்த உணவுகளை சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும் அசிடிட்டி, வயிறு உப்புசம், போன்ற பிரச்சனைகள் வரலாம். எனவே நெய் மற்றும் பொரித்த உணவுகளை ஒன்றாக சாப்பிடுவதை தவிர்க்கவும்.