Search
Search

தூத்துக்குடி வைகுண்டநாதர் (நவதிருப்பதி 1) கோவில் வரலாறு

aanmeegam in tamil

ஊர் -ஸ்ரீவைகுண்டம்

மாவட்டம் -தூத்துக்குடி

மாநிலம் -தமிழ்நாடு

மூலவர் -ஸ்ரீ வைகுண்ட நாதர் (நின்ற திருக்கோலம்)

தாயார்- வைகுந்த நாயகி, சோரநாத நாயகி

தீர்த்தம்- தாமிரபரணி தீர்த்தம் ,ப்ருகு தீர்த்தம் ,கலச தீர்த்தம்

திருவிழா -வைகுண்ட ஏகாதசி ,தை தெப்பத்திருவிழா

திறக்கும் நேரம் -காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8: 30 மணி வரை.

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 86 வது திவ்ய தேசம்.

தல வரலாறு:

பிரம்மாவிடம் இருந்து வேத சாஸ்திரங்களை திருடிச் சென்றான் சோமுகன் என்னும் அசுரன். இதனால் மனம் வருந்திய பிரம்மா மகாவிஷ்ணுவை வேண்டி பூலோகத்தில் தாமிரபரணி நதிக்கரையில் தவமிருந்தார். அவரது தவத்தை மெச்சி திருமால் காட்சி கொடுத்து அசுரனை அழித்து வேதங்களை மீட்டுத் தந்தார். பிரம்மனின் வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளி வைகுண்டநாதர் என்ற திருநாமமும் பெற்றார். பால்பாண்டி என்று மற்றொரு பெயரும் இத்தலத்து பெருமாளுக்கு உண்டு.

aanmeegam in tamil

மதுரை திருநெல்வேலி பகுதிகளில் பால்பாண்டி என்ற பெயரை மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சூட்டும் வழக்கம் இன்றளவும் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் இக்கோயில் வழிபாடு இன்றி மறைந்து போனது ,சுவாமி சிலையும் ஆற்றங்கரையில் ஓரிடத்தில் புதைந்திருந்தது. அப்போது மேய்ச்சலுக்கு வந்த அரண்மனை பசு தொடர்ச்சியாக இங்கிருந்த புற்றில் பால் சுரந்தது. இதை அறிந்த பாண்டிய மன்னன் அவ்விடத்தில் சுவாமி சிலை இருந்ததைக் கண்டு கோயில் எழுப்பினான். பாலாபிஷேகம் செய்து பூஜித்தான், பாண்டிய மன்னன் பால் அபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்தமையால் இந்த சுவாமிக்கு பால்பாண்டி என்ற பெயர் ஏற்பட்டது.

சோழநாட்டில் அமைந்துள்ள நவகிரகங்களுக்கு ஒப்பாக பாண்டி நாட்டு நவதிருப்பதிகள் நவகிரகங்களாக போற்றப்படுகிறது. இங்கு கிரகங்களாக பெருமாள் செயல்படுவதால் நவகிரகங்களுக்கு என தனியே சன்னதி அமைக்கப் படுவதில்லை. நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும் .பொதுவாக பெருமாள் ஆதிசேஷன் மீது சயனித்தபடி இருப்பார் ஆனால் இங்கு ஆதிசேஷன் குடைபிடிக்க பெருமாள் நின்ற திருக்கோலத்தில் இருப்பது தனிச்சிறப்பாகும்.

இத்தலத்தில் சுவாமியே ,வைகுண்டநாதராக அருளுவதால் ,இங்கு வேண்டிக் கொள்பவர்களுக்கு வைகுண்டத்தில் இடம் கிடைப்பதாக நம்பிக்கை. தவிர இந்த ஊரிலேயே கயிலாயநாதர் கோயிலும் உள்ளது .இந்த கோயில் வேண்டிக் கொள்பவர்களுக்கு கைலாயத்தில் இடம் கிடைக்கும். இவ்வாறு ஒரே ஊரில் வைகுண்டம், கைலாயம் என இரண்டையும் தரிசிக்கலாம் என்பது விசேஷம்.

வைகுண்ட ஏகாதேசி அன்று உற்சவர் கண்ணபிரானை அர்த்த மண்டபத்திற்குள் கொண்டு செல்வர் இவ்வேளையில் சன்னதியை அடைத்துவிடுவார்கள், பின் கண் இமைக்கும் நேரத்திற்குள் நடை திறந்து சுவாமிக்கு தீபாராதனை காட்டி உடனே அடைத்துவிடுவார்கள். ஒரு சில மணித்துளிகள் இந்த வைபவம் நடந்து முடிந்துவிடும் ,இவ்வேளையில் சுவாமியை தரிசித்தால் பிறப்பில்லாத நிலை கிடைப்பதாக நம்பிக்கை. நவதிருப்பதி தலங்களில் முதல் முதலாவதான இத்தலம் சூரியனுக்கு உரியது இங்கு சுவாமி

இந்திர விமானத்தின் கீழ் நின்ற நிலையில் காட்சி தருகிறார் .கையில் தண்டம் இருக்கிறது தலையில் மேலே ஆதிசேஷன் குடையாக இருக்கிறார். சுவாமியுடன் தாயார்கள் கிடையாது பிரகாரத்தில் வைகுந்த வல்லி தாயார் சன்னதி இருக்கிறது .சித்திரை மற்றும் ஐப்பசி மாத பௌர்ணமி அன்று காலையில் சூரிய ஒளி வைகுண்டநாதர் பாதத்தில் விழும் இதற்கு ஏற்றாற்போல் சுவாமி சன்னதி எதிரிலுள்ள கொடிமரம் பலிபீடம் பின்புறம் விலகி இருக்கிறது. ஜாதகத்தில் சூரியன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள், தோஷ நிவர்த்திக்காக இங்கு வேண்டிக்கொள்ளலாம்.

மேலும் அனைத்து 108 திவ்ய தேசங்கள் வைணவத் தலங்களின் வரலாற்றை இங்கு அறிந்து கொள்ளலாம்.

Leave a Reply

You May Also Like