சோகத்தோடு நிறைவுபெற்ற 50 ஆண்டுகால சினிமா பயணம் – நடிகர் சரத்பாபு காலமானார்!

தமிழில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் 1977ம் ஆண்டு வெளியான பட்டினப் பிரவேசம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகர் சரத்பாபு. சிறு வயது முதலிலேயே காவல்துறையில் மிகப்பெரிய அதிகாரியாக ஆக வேண்டும் என்ற மாபெரும் லட்சியத்துடன் படித்தவர்.
ஆனால் அவருக்கு கண்ணில் ஏற்பட்ட சிறு கோளாறு காரணமாக அந்த கனவு, கனவாகவே போனது. அதன் பிறகு அவருடைய கல்லூரி ஆசிரியர்கள் பலர், அவர் பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் திரைப்படங்களில் நடித்தால் அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்று கூறிய நிலையில் அவர் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.
ராம ராஜ்யம் என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் இவர் திரைத்துறையில் 1973ம் ஆண்டு அறிமுகமானார். தமிழில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் பல திரைப்படங்களில் இவர் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய அண்ணாமலை திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. தமிழை பொறுத்தவரைக்கும் 1977ம் ஆண்டு துவங்கி 2023ம் ஆண்டு வரை இவர் நடித்து வந்துள்ளார்.
இறுதியாக இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வசந்த முல்லை என்பது குறிப்பிடத்தக்கது, சசுமார் 50 வருடங்களாக திரை துறையில் பயணித்து வந்த சரத்பாபு, சில தினங்களுக்கு முன்பு உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அப்பொழுது அவர் இறந்து விட்டதாகவும் செய்திகள் போலியாக பரவிய நிலையில் அவருடைய சகோதரி அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில் ஹைதராபாத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 71 வது வயதில் சரத்பாபு இன்று காலமானார்.