சிறுவர்கள் வீடியோ கேம்களுக்கு அடிமையாகும் காரணங்கள் மற்றும் தீர்வுகள்
சிறுவர்கள் வீடியோ கேம்களை மிகவும் விரும்பி அடிமையாக மாறுவதைப் பற்றி கவலை அதிகமாக உள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன.
வீடியோ கேம்கள் சிறுவர்களுக்கு ஒரு மெய்நிகர் உலகத்தை வழங்கி, அங்கு அவர்கள் சுதந்திரமாக செயல்பட்டு முடிவுகளை எடுக்க முடியும். நிஜ வாழ்க்கையில் பெற்றோரின் கட்டுப்பாட்டால் அவர்கள் சுதந்திரம் பெற முடியாததால், கேம்களில் அதனைத் தேடுகிறார்கள்.
கேம்களில் பல சவால்கள் இருக்கும். அவற்றை கடந்து வெற்றி பெறும் போது சிறுவர்கள் மகிழ்ச்சி மற்றும் ஊக்கத்தை பெறுகிறார்கள். வெற்றி பெற்றபோது உடலில் டோபமைன் என்ற ஹார்மோன் அதிகரித்து இனிமையான உணர்வை ஏற்படுத்துகிறது. இதனால் மீண்டும் மீண்டும் கேம்களை விளையாட விரும்புகிறார்கள்.
பள்ளி படிப்பு மற்றும் பெற்றோரின் அழுத்தம் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அதிலிருந்து தப்பி, கற்பனையான உலகில் சிறிது நேரம் இருக்க கேம்கள் உதவுகின்றன. சில சிறுவர்கள் உணர்ச்சிகளை நிர்வகிக்க, பிரச்னைகளை மறக்க, தனிமையை போக்க கேம்களை பயன்படுத்துகிறார்கள்.
அதிக நேரம் விளையாடுவது உடல் பருமனுக்கு, தூக்க குறைபாடு, மனநிலை பாதிப்புக்கு வழிவகுக்கும். சில கேம்களில் வன்முறை உள்ளதால் மனநிலையை பாதிக்கலாம். ஆன்லைன் கேமிங்கில் துன்புறுத்தல் மற்றும் கொடுமை சமூகத் தொடர்புகளை பாதிக்கிறது.
இதனை தவிர்க்க பெற்றோர்கள் செய்யவேண்டியது என்ன?
வீடியோ கேம்களை முழுமையாக தடை செய்யாமல், நேரம் குறைத்து கட்டுப்படுத்த வேண்டும்.
வீட்டுப் பாடம் முடிந்த பிறகு தினமும் ஒரு மணி நேரம் மட்டுமே கேம்கள் விளையாட அனுமதிக்கலாம்.
உணவு மேசை, படுக்கையறை, படிக்கும் அறையில் செல்போன் பயன்படுத்தக்கூடாது.
குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு அவர்களின் மன உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும்.
வெளியில் அழைத்து செல்லுதல், புதிய விளையாட்டுகளை அறிமுகப்படுத்துதல் போன்ற மாற்று நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
பெற்றோர்களும் செல்போன் பயன்பாட்டை குறைத்து முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.