விடுதலை பாகம் 1 : “கரணம் தப்பினால் மரணம்” – வைரலாகும் சூரியின் ஸ்டண்ட் காட்சிகள்

சினிமாவை நம்பி தங்கள் சொந்த ஊரிலிருந்து சென்னை நோக்கி படையெடுத்த தனி மனிதர்களின் பட்டியல் தினமும் நீண்டு கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் மதுரையிலிருந்து மிகப்பெரிய நடிகனாக மாறிவிட வேண்டும் என்ற மாபெரும் கனவோடு சென்னை வந்தவர் தான் நடிகர் சூரி.
இவருடைய இயற்பெயர் ராம லக்ஷ்மணன் முத்துசாமி, சென்னைக்கு வந்து வாய்ப்பு கிடைக்காமல் பசியில் வாடி பல தயாரிப்பு நிறுவனங்கள் ஏறி இறங்கிய பல மனிதர்களில் இவரும் ஒருவர். 1997ம் ஆண்டு வெளியான காதலுக்கு மரியாதை படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் இவர் நடிக்க தொடங்கினார்.
அதன் பிறகு சுமார் 10 ஆண்டுகள் சினிமா துறையில் அவர் பல சின்ன சிறு வேடங்களை ஏற்று நடித்து வந்தார், ஆனால் இவை எதுவும் அவருக்கு ஒரு நல்ல பெயரை அளிக்கவில்லை. முதல் முதலாக 2009ம் ஆண்டு சுசீந்திரன் இயக்கிய முதல் படமான வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அன்றுவரை சூரி என்று அழைக்கப்பட்ட இவர் அந்த படத்திற்கு பிறகு பரோட்டா சூரி என்று அழைக்கப்பட்டார். அங்கு தொடங்கியது இவர் சினிமா பயணம் என்றே கூறலாம், அதன் பிறகு தொடர்ச்சியாக பல வெற்றி படங்களை இன்றளவும் கொடுத்து வருகிறார்.
வருடத்திற்கு 10 படங்கள் வரை நடிக்கும் அளவிற்கு மிகப்பெரிய காமெடி நடிகராக மாறியவர் இறுதியாக சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தில் நடித்திருந்தார். தற்பொழுது வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை – முதல் பாகம் திரைப்படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருந்தாலும், இந்த கதையின் நாயகனா கருதப்படுபவர் சூரியே. இந்த படத்திற்காக உடற்கட்டை மாற்றியது மட்டுமல்லாமல் பல ரிஸ்க்கான ஸ்டன்ட் காட்சிகளில் ஒரு சூப்பர் ஹீரோவுக்கு இணையான அளவிற்கு தன்னால் இயன்ற அனைத்தையும் கொடுத்துள்ளார்.
தற்பொழுது இவர் விடுதலை படத்துக்காக மேற்கொண்டு ஸ்டண்ட் காட்சிகளின் தொகுப்புகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.