நடிகர் என்று கூறாமல், நண்பர் என்று கூறிய சூப்பர் ஸ்டார்.. நெகிழ்ந்து போன சசிகுமார் – ஏன்?

ஒரு திரைப்படம் பலரின் உழைப்பில் உருவாகி, திரையரங்குகளில் வெளியாகும் பொழுது அந்த படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களின் எதிர்பார்ப்பு என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்று. அந்த வகையில் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி பெரிய அளவில் ஓடாத நிலையில் OTT-யில் வெளியான திரைப்படம் தான் அயோத்தி.
ஆனால் இன்று அதை OTTயில் பார்த்த பலரும், ஆகா இந்த திரைப்படத்தை திரையரங்கில் பார்க்க தவறிவிட்டோமே வருந்துகின்றனர் என்று தான் கூறவேண்டும். அந்த அளவிற்கு மாபெரும் வெற்றி திரைப்படமாக உருவாகியுள்ளது அயோத்தி.
இயக்குனர் ஆர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் இந்த திரைப்படம் வெளியாகி உள்ளது, இது இவருடைய முதல் படைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. சசிகுமார் அவர்கள் கதையின் நாயகனாகவும் விஜய் டிவி புகழ் நடிகர் புகழ் அவர்களும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
பல தரப்பிலிருந்து இந்த படத்துக்கு பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளது, இந்நிலையில் தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ஆன ரஜினிகாந்த் அவர்கள் வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவில் அயோத்தி படம் நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்கள் கழித்து அருமையான கருத்துள்ள ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது.
முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குனர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி, தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுக்கள் என்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு பதில் அளித்துள்ள நடிகர் சசிகுமார், “நடிகன் என குறிப்பிடாமல், என்னை நண்பர் என்று சொன்னதிலேயே மிகுந்த மகிழ்ச்சி அடைந்து விட்டேன்.
எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் மிக எளிய படைப்பாக வந்திருக்கும் அயோத்தி படத்தை பார்த்து பாராட்டியது, நல்ல படைப்புகளுக்கான பெரிய நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது நன்றி சார், என்று குறிப்பிட்டுள்ளார். அயோத்தி ஒரு வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்ட மாபெரும் வெற்றி திரைப்படமாக உருவாகியுள்ளதில் எந்தவித சந்தேகமும் இல்லை.