சென்னையில் மாபெரும் அரங்க அமைப்பு.. மிக பிரம்மாண்டமாக உருவாகும் இந்தியன் 2!

இந்தியன் 2 திரைப்படம் பல தடைகளை தாண்டி தற்பொழுது உருவாகி வருகிறது என்று தான் கூற வேண்டும். சில வாரங்களுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்பொழுது சென்னையில் படபிடிப்பு வேலைகள் துவங்கியுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22ம் தேதி சென்னை புறநகரில் உள்ள பூந்தமல்லியில் இருக்கும் ஈ.வி.பி பிலிம் சிட்டியில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு நடந்து வந்தது. அப்பொழுது எதிர்பாராத விதமாக ஒரு கிரேன் அறுந்து விழுந்ததில் உதவி இயக்குனர் ஒருவர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.
அந்த உதவி இயக்குனர் பிரபல கார்ட்டூனிஸ்ட் மதன் அவர்களின் மருமகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இந்த படத்தில் நடித்து வந்த பிரபல நடிகர் விவேக் அவர்கள் மறைந்தது இந்த படக்குழுவினருக்கு மாபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இருப்பினும் விவேக் அவர்களுடைய காட்சிகள் நீக்கப்படாமல் நிச்சயம் இந்தியன் 2 படத்தில் இடம்பெறும் என்று பாபி சிம்ஹா அண்மையில் கூறியதும் நாம் அறிவோம். தற்போது சென்னை, வடபழனி அருகே உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் ஒரு மாபெரும் அரங்க அமைப்பு அமைக்கப்பட்டு வருவதாகவும். அங்கு இந்தியன் 2 படப்பிடிப்பு மிக மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுவரை கமல் நடித்த படங்களிலேயே மிக மிக அதிக பட்ஜெட்டில் உருவாகும் ஒரு திரைப்படமாக இந்தியன் 2 உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரபல சினிமா விமர்சகர் ஐயா செய்யாறு பாலு அவர்கள் இந்த தகவல்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.