குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்கனுமா..? இதோ நச்சுனு சில டிப்ஸ்..!

இன்றைய கம்ப்யூட்டர் காலத்தில் பிறக்கும் குழந்தைகள், மிகவும் புத்திசாலிகளாகவும், அதிக சாமர்த்தியம் கொண்டவர்களாகவும் உள்ளார்கள். இதுமட்டுமின்றி, பெற்றோர்களின் பேச்சை கேட்காமல், அதிக அட்டகாசம் செய்பவர்களாகவும் உள்ளனர்.

( 90-ஸ் கிட்ஸ் நாங்க, நிலாவுல ஆயா இருக்குனு சொன்னத கூட நம்பிட்டு இருந்தோம். ) எனவே, அந்த குழந்தைகள் பெற்றோர்களின் பேச்சை கேட்க வைப்பதற்கு சில டிப்ஸ்கள் உள்ளது.அந்த டிப்ஸ்கள் பின்வருமாறு:

குழந்தைகளிடம் நீங்கள் ஏதேனும் விஷயத்தை செய்ய சொல்ல நினைக்கும்போது, அவர்கள் அதற்கு முழு ஈடுபாட்டோடு இருக்க வேண்டும். எனவே, அவர்கள் உங்களை முழுமையாக கவனிக்கும் போது மட்டுமே, நீங்கள் சொல்ல வரும் விஷயத்தை கூறுங்கள். அதுவரை எதுவும் பேசாதீர்கள்.

Advertisement

உங்கள் குழந்தை நீங்கள் கூறிய விஷயத்தை மதிக்காமல் இருந்தால், சிறிது நேரம் அப்படியே விட்டுவிடுங்கள். தொடர்ந்து கூறிக் கொண்டே சென்றால், அவர்கள் உங்களை மதிக்காமல் போவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, ஒரு முறை கூறிவிட்டு, அவர்கள் செய்யவில்லையெனில், அவர்களே வரும் வரை, உங்களது மற்ற வேலைகளை பாருங்கள். அவ்வாறு செய்தால், தான் செய்தது தவறு என்று அவர்களே விரைவில் உணர்வார்கள்.

குழந்தைகளிடம் ஏதேனும் வேலை வாங்க நினைத்தால் அல்லது அவர்களிடம் ஏதேனும் சொல்ல நினைத்தால், குறுகிய வார்த்தைகளை கொண்டே பேச முயற்சி செய்யுங்கள். வளவளவென்று பேசினால், அவர்களது கவனம் திசை திரும்ப வாய்ப்பு உள்ளது. எனவே, சார்ட் அன்ட் ஸ்வீட்டாக பேசி முடியுங்கள்.

பெரும்பாலும், குழந்தைகளின் கண்ணோட்டத்தில் இருந்து நாம் பார்த்தாலே, அவர்களை நம் கையில் கொண்டு வந்து விடலாம். எனவே, ஏதேனும் வேலை கொடுக்க நினைத்தால், அவர்களால் அது செய்ய முடியுமா..? அது அவர்களுக்கு பிடித்த வேலையா..? என்று அனைத்து விஷயங்கள் பற்றியும் யோசியுங்கள்.

எப்போதும் உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் கட்டளையிடுவது போல அவர்களை மட்டும் வேலை செய்ய சொல்லாமல், நீங்களும் அவர்களுடன் சேர்ந்து அந்த வேலையை செய்ய முயற்சி செய்யுங்கள். அனைவரும் சேர்ந்து வேலை பார்க்கும் போது, பேசிக் கொண்டே செய்வீர்கள். இதனால் உங்கள் குழந்தைக்கும் பல புதிய விடயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைப்பதோடு, ஆர்வத்தோடும் செயல்படுவார்கள்.

குழந்தைகள் என்ன சேட்டை செய்தாலும், அவர்களிடம் கோபம் கொள்வதை தவிர்க்கவே செய்யுங்கள். கோபத்தின் வழியாக குழந்தைகளை கட்டுக்குள் கொண்டு வரவே முடியாது. எனவே, முடிந்தவரையில் அமைதியாக இருங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், பெற்றோர்கள் மீது குழந்தைகளுக்கு, மரியாதையும், பயமும் ஏற்படும்.

குழந்தைகள் நமக்கு மரியாதை தரவேண்டும் என்று பெற்றோர்கள் நினைப்பதைப் போன்று, அவர்களும் குழந்தைகளுக்கு மரியாதை தரவேண்டும். அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்க வேண்டும். சின்ன குழந்தை உனக்கென்ன தெரியும் என்று இருக்காமல், இது உனக்கு தெரியுமா என்று அவர்களை ஊக்கப்படுத்துங்கள்.

குழந்தைகளுக்கு அதிகாரமாகவும், கட்டளையிடுவது போன்றும் கூறினால், பொதுவாக பிடிக்காது. எனவே, அவ்வாறு எந்த விஷயத்தையும் சொல்லாமல், எதற்காக அந்த விஷயத்தை செய்ய வேண்டும் என்றும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், அது செய்யவில்லையென்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விரிவாக பேசுங்கள்.

குழந்தைகளிடம் தொட்டுப் பேசுங்கள் பெற்றோர்களே..!

குழந்தைகளிடம் ஒரு நாளில் 3 நேரங்களில் தொட்டுப் பேச வேண்டும் என்று உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இது அவர்களது மனஅளவில் மிகச்சிறந்த மாற்றத்தை தரும் என்றும், அவர்களது வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏதாவது இருந்தாலும், அதனை பெற்றோர்கள் அறிய உதவியாக இருக்கும் என்றும் உளவியலாளர்கள் கூறுகின்றனர்.

எந்தெந்த நேரங்களில் தொட்டு பேச வேண்டும்..?

காலை எழுந்ததும் குழந்தைகளை திட்டிக்கொண்டே எழுப்புவதை தவிர்த்துவிட்டு, அவர்களை கொஞ்சிக் கொண்டே எழுப்ப வேண்டும். இவ்வாறு செய்தால், அன்றைய தின ஆரம்பம் முதலே, அவர்கள் புத்துணர்ச்சியாக செயல்படுவார்கள்.

வீட்டுக்கு வந்ததும் உட்காரவைத்து தலையை கோதி முத்தமிட்டு அவர்களிடம் பேசி நடந்த விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். இதனால் அவர்களது பள்ளியில் என்னநடந்தது, அசிரியர்கள் என்ன சொன்னார்கள், நண்பர்களுடன் விவாதம் நடந்ததா? என அனைத்தையும் உங்களிடம் சொல்ல துவங்குவார்கள். இது குழந்தைகளை சரியான வழியில் செல்லத்தூண்டும்.

இரவு நேரங்களில் குழந்தைகள் தூங்குவதற்கு முன்பு, சிறிய கதைகளை சொல்லுவதோ, அவர்களிடம் நன்றாக உரையாடுவதோ, குழந்தைகளின் மனநிலையில் நல்ல மாற்றங்களை கொண்டு வரும். மேலும், அவர்களது விருப்பு வெறுப்புகளை புரிந்துக் கொள்ள பெற்றோர்களுக்கு உதவியாக இருக்கும். அந்த நேரத்தில் குழந்தைகளின் கைகை பிடித்து கொண்டோ அல்லது அவர்களது முதுகில் கைவைத்து தடவியோ பேசுவது அவசியம்.

குழந்தைகளுடன் எவ்வளவு அதிகமாக பெற்றோர்கள் உரையாடல்களை நிகழ்த்துகிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்களது மனநிலை நல்ல விதத்தில் இருக்கும்.