Search
Search

கோவளம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் வரலாறு

sri kailasanathar kovil chennai tamil nadu

பல்லவர்கள் மற்றும் சோழர்கள் ஆளுகைக்கு உட்பட்ட தலம், சோழ மன்னனின் திருப்பணிகள் நடந்த தலம். தொண்டை மண்டலப் பழங்கோயில். சைவ-வைணவத்தை இணைத்த கோயில். கல்வெட்டுடன் கூடிய சதுர வடிவ ஆவுடையார் கொண்ட கோயில், நாகதேவதை. காளியை உள்ளடக்கிய கோயில் என பல்வேறு பெருமைகளைக் கொண்ட திருக்கோயில் கோவளம் அருள்மிகு கனகவல்லி உடனுறை கைலாசநாதர் திருக்கோயில்.

கோவளம் பழம்பெருமை வாய்ந்த ஊர். கோவளத்தை கோ +அளம் எனப் பிரித்தால், ‘கோ’ என்பது அரசனையும், தலைமையையும் குறிக்கும். ‘அளம்’ என்பது உப்பைக் குறிக்கும். இப்பகுதி உப்பு உற்பத்தியில் சிறந்தோங்கியதால் ‘கோவளம்’ எனப் பெயர்பெற்றது.

sri kailasanathar kovil chennai tamil nadu

கோவளம் கோயிலில் தட்சிணாமூர்த்தி சிலை கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டதை இக்கோயில் கல் வெட்டு நமக்கு எடுத்துக்காட்டுகிறது. இந்தக் கல்வெட்டின் மூலம் தற்போதுள்ள இக்கோயில் 700 ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்பதை ஆதாரபூர்வமாக உணரலாம்.

இங்கு பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளது.

இக்கோயிலுக்கு இராஜகோபுரம் ஏதுமில்லை. சுற்றுச்சுவர் தெற்கு நோக்கிய வாசல் வழியே நம்மை வரவேற்கிறது. கோயிலின் உட்புறச்சுவர் மாடத்தில் ‘ஓம் சக்தி விநாயகர்’ வடக்கு நோக்கி அம்பாளைத் தரிசித்தவண்ணம் அமைந்துள்ளன.

முதல் சன்னதியாக, ஸ்ரீ வலம்புரி விநாயகர், அடுத்து வள்ளி-தெய்வானை உடனுறை சுப்பிரமணியர் சன்னதி கிழக்கு நோக்கியும், சற்று வடக்கே சக்தி வடிவான அன்னை ‘கனகவல்லி’யும் தெற்கு நோக்கியபடி எழிலுடன் காட்சி தருகிறாள். அதே மண்டபத்தில் கோயிலின் தலைமை நாயகன் அருள்மிகு கைலாசநாதர் ஆவுடையாராக கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

கோயிலின் சுற்றுப்புறத்தில் ஒற்றைக்கொம்பு விநாயகர், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ சத்யநாராயணன், பிரம்மா, துர்க்கை நிலைகள் அமைந்துள்ளன. துர்க்கையம்மன் அருகே சண்டிகேசுவரர் சன்னதி. இதனருகில் சிற்பக் கலையுடன் கூடிய நாக கன்னிகள் கல் மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது. அனுமன் மலையைத் தூக்குவது. சிவனைத் தூக்குவது போன்றவையும், ஸ்ரீராமர் போன்ற சிற்பங்களும் அமைந்துள்ளன.

கோயிலின் வடக்குப் பகுதியில் 28 தூண்களுடன் கூடிய நீண்ட நெடிய கல் மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது. இம்மண்டபத்தில் ஸ்ரீ சூரியநாராயணன், ஸ்ரீநிவாசப் பெருமாள், அலமேலு மங்கை, சிவபெருமான், காளி, பைரவர், நாகேந்திரன் என தெய்வங்களின் கூட்டமைப்பு அமைந்துள்ளது. இது சைவத்தையும் வைணவத்தையும் ஒருங்கிணைக்கும் பாலமாகத் திகழ்கின்றது. வில்வம்,மா மற்றும் பலா இக்கோயிலின் தல விருட்சங்கள் ஆகும்.

தீராத கவலைகள் தீரவும், காரியம் கைகூடவும் கண்கண்ட தெய்வமாக கைலாச நாதர் விளங்குவதால் பக்தர்களின் கூட்டம் மெல்ல மெல்ல கூடி வருகின்றது. இங்குள்ள காளியை மூன்று பௌர்ணமி நாட்களில் தொடர்ந்து வழிபட்டு வந்தால் தீவினை அகன்றுவிடும் என்பது ஐதீகம்.

தன்னை நாடி வரும் பக்தர்களை நலமுடன் வாழச் செய்வதில் குறைவின்றி செய்து வருகிறார் கோவளம். அருள்மிகு கைலாசநாதர் என்பது மறுக்க முடியாத உண்மை.

இக்கோயில் சென்னை-மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரை சாலையில் 36 கி. மீ. தொலைவில் உள்ள ‘கோவளம்” என்ற ஊரில் அமைந்துள்ளது.

இதனருகில் 3 கி.மீ. தொலைவில் புகழ்மிக்க திருவிடந்தை ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாள் கோயில் உள்ளது.

You May Also Like