தமிழகத்தில் நிரந்தரமாக மூடப்படும் ஹோட்டல்கள் – காரணம் என்ன?

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா நெருக்கடியை தமிழகம் சந்தித்து வருகிறது. பொருளாதார ரீதியான சிக்கல் காரணமாக பலரின் தொழில்கள் முடங்கியது.
கொரோனா முதல் அலை காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் அனைத்து ஓட்டல்களும் மூடப்பட்டன. பிறகு வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி தரப்பட்டது. இதனால் முடங்கி கிடந்த ஓட்டல் தொழில் மீண்டு வந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா இரண்டாவது அலை வந்ததால் ஓட்டல்கள் மீண்டும் மூடப்பட்டன.
பார்சல் சேவை மூலம் கிடைக்கும் வருமானம் மின் கட்டணம், ஊழியர்களுக்கான சம்பளம், வாடகை கொடுப்பதற்கு போதுமானதாக இல்லை என்கிற நிலை உருவாகியுள்ளது.
இனியும் ஓட்டல் தொழிலை நடத்த முடியாது என்று கருதி ஓட்டல்களை சிலர் வேறு நபர்களிடம் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஓட்டல்கள் இருந்த கட்டடங்கள் வேறு கடைகளாக மாற்றப்பட்டு கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக ஹோட்டலில் வேலை செய்பவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
ஓட்டல்களை முழுவதுமாக திறக்க அனுமதிக்க வேண்டும். ஓட்டல்களுக்கான சொத்து வரி, குடிநீர் வரி, கழிவு நீர் அகற்றும் வரி, மின் கட்டணம் போன்றவற்றை தள்ளுபடி செய்ய வேண்டும். ஏசி அல்லாத ஓட்டல்களை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சில முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.