கர்ணன் (2021) திரை விமர்சனம்
தனுஷ், யோகி பாபு, லால், நடராஜன் சுப்பிரமணியம் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் கலைப்புலி எஸ். தானு இந்தப்படத்தை தயாரித்துள்ளார். மாரி செல்வராஜ் இத்திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பொடியங்குளம் என்ற கிராமத்தில் பேருந்து வசதி இல்லாததால் தங்களது ஊரில் பேருந்து நிற்க வேண்டும் என அந்த ஊர் மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால் உங்களின் ஊருக்கு பேருந்து நிறுத்தம் இல்லை என ஓட்டுனர்கள் நிராகரிக்கிறார்கள். தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற மக்கள் பல வழிகளில் போராடுகிறார்கள்.
ஒரு கட்டத்தில் கோரிக்கையை நிறைவேற்ற தனுஷ் மக்களுக்காகவும் தங்களது உரிமைக்காகவும் வாளேந்தி போராடுகிறார். அவருடைய போராட்டம் நிறைவேறியதா? அடக்க நினைக்கும் அதிகார வர்க்கத்திற்கு அவர் கொடுத்த பதிலடி என்ன? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
அசுரன் படத்தை போல தனுஷ் இந்தப்படத்திலும் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கிராமத்து இளைஞராக வரும் தனுஷ் கீழ் ஜாதி மக்களின் உணர்வுகளை கண்முன்னே கொண்டு வருகிறார்.
தனுசுக்கு துணையாக இருக்கும் நடிகர் லால் அவரும் தனது முழுமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். யோகி பாபு காமெடி கலந்த நல்ல கதாபாத்திரம் இப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
ரஜிஷா விஜயன், கௌரி, லக்ஷ்மி ப்ரியா சந்திரமௌலி உள்ளிட்டோர் இக்கதைக்கு சரியான பங்களிப்பை கொடுக்கிறார்கள்.
சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். அனைத்து பாடல்களுமே ரசிக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக ‘கண்டா வரச்சொல்லுங்க பாடல் ‘ அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது.
கிராமத்தின் நிலப்பரப்பை அழகாகவும் நேர்த்தியாகவும் அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர். பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி பாராட்டுகளைப் பெற்ற இயக்குனர் மாரி செல்வராஜ் இந்த படத்தையும் சிறப்பாக இயக்கியுள்ளார்.
