மாறன் திரை விமர்சனம்
தனுஷ், மாளவிகா மோகனன், ஸ்மிருதி வெங்கட், போஸ் வெங்கட், ஜெயப்ரகாஷ், நரேன், ராம்கி, சமுத்திரக்கனி, இளவரசு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கார்த்திக் நரேன் இப்படத்தை இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
நேற்று மாலை 5 மணிக்கு தனுஷின் மாறன் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியிடப்பட்டது.
படத்தின் கதை
தனுஷின் தந்தை ராம்கி ஒரு பத்திரிகையாளர். அவர் ஒரு கல்வித் தந்தையின் ஊழலை அம்பலப்படுத்தியதற்காக கொல்லப்படுகிறார். தந்தையை இழந்த நாயகன் தனுஷ், தனது தங்கை ஸ்ம்ருதி வெங்கட்டுடன் தாய்மாமா ஆடுகளம் நரேன் அரவணைப்பில் வளர்கிறார்.
தந்தையை போலவே தனுஷ் நேர்மையான பத்திரியாளராக மாறுகிறார். இந்நிலையில் அரசியல்வாதியாக இருக்கும் சமுத்திரக்கனியின் சதிவேலையை தனுஷ் பத்திரிகையில் எழுதுகிறார். இதனால் கோபமடையும் சமுத்திரக்கனி தனுஷை பழிவாங்க நினைக்கிறார். இறுதியில் சமுத்திரக்கனி தனுஷை பழிவாங்கினாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.

நாயகனாக நடித்திருக்கும் தனுஷ் ஆர்ப்பாட்டம் இல்லாமல் சாதுவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தங்கையாக வரும் ஸ்ம்ருதி வெங்கட் துறுதுறு நடிப்பால் பளிச்சிடுகிறார்.
தனுசுக்கு ஜோடியாக வரும் மாளவிகாவும் சக பத்திரிகையாளராக காட்டப்படுகிறார். ஆனால் அந்த அலுவலகத்தில் அவர் என்ன வேலை செய்கிறார் என்று கடைசிவரை சொல்லப்படவில்லை.
திரைக்கதை சுவாரஸ்யம் இல்லாமல் பயணிப்பது பலவீனமாக அமைந்திருக்கிறது. இளவரசு, ஜெயபிரகாஷ், நரேன், போஸ் வெங்கட் என பலருடைய கதாபாத்திரத்தை வீணடித்திருக்கிறார்கள்.
விவேகானந்த் சந்தோஷம் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. ஜி.வி பிரகாஷின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.
மொத்தத்தில் மாறன் – எவ்வித நோக்கமும் இல்லாமல் நகர்கிறது.
