முருங்கைக்காய் சிப்ஸ் திரை விமர்சனம்
ஷாந்தனு, அதுல்யா ரவி நடிப்பில் வெளியாகியுள்ள படம் முருங்கைக்காய் சிப்ஸ். மேலும் இப்படத்தில் யோகிபாபு, பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, முனீஸ்காந்த், மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தரண் குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஷாந்தனுவ, அதுல்யா ரவி இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது. முதலிரவு அன்று ஷாந்தனுவின் தாத்தா பாக்கியராஜ் “உங்கள் இருவருக்கும் முதலிரவு நடந்தால் பரம்பரை சொத்துக்கள் அனைத்தையும் ஆசிரமத்திற்கு எழுதி வைத்து விடுவேன்” என்கிறார்.
இன்னொருபுறம் அதுல்யா ரவியின் அத்தை ஊர்வசி “உங்கள் இருவருக்கும் முதலிரவு நடக்கவில்லை என்றால் குழந்தை பிறக்காது என்ற தோஷம் ஏற்படும்” என்று கூறுகிறார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் முதலிரவு நடந்ததா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.

படம் முழுவதும் ஒரே இரவில் நடக்கிறது. மேலும் இரட்டை அர்த்த வசனங்களை அள்ளித் தெளிக்கிறார்கள். கதையும் திரைக்கதையும் அரதப் பழசாக இருக்கிறது. ஒரு சில காட்சிகள் பல படங்களில் பார்த்து சலித்துப்போன காட்சிகளாக உள்ளது.
படத்தில் யோகிபாபு, முனீஸ்காந்த், மயில்சாமி என நகைச்சுவை நடிகர்கள் இருந்தும் காமெடி காட்சிகள் பலனளிக்கவில்லை. சிரிப்புக்கு பதிலாக வெறுப்பு தான் மிஞ்சுகிறது.
அதுல்யா மற்றும் சாந்தனுவின் உறவினர்களும் நண்பர்களும் முதலிரவு குறித்து மோசமான அறிவுரைகளை கொடுக்கிறார்கள். படம் முழுக்க உடலுறவு குறித்து பிற்போக்குத்தனமான கருத்துக்களை சொல்லியிருக்கிறார்கள். ரமேஷ் சக்கரவர்த்தியின் ஒளிப்பதிவு தரண் குமாரின் பின்னணி இசையை ஓரளவு பாராட்டலாம்.
மொத்தத்தில் முருங்கைக்காய் சிப்ஸில் எந்த சுவையும் இல்லை.
