நவரசா விமர்சனம் : கௌதம் மேனனின் அமைதி
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், பாபி சிம்ஹா இருவரும் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கௌதம் வாசுதேவ் மேனன், பாபி சிம்ஹா ஈழத்தமிழர்களான இருவரும் போர் சூழலில் எல்லையோரம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த நேரத்தில் ஒரு சிறுவன் எல்லைப் பகுதியை கடக்க முயல்கிறான். பாபி சிம்ஹா அந்த சிறுவனைப் பிடித்து விசாரிக்கின்றார்.

விசாரிக்கும்போது அந்த சிறுவன் எல்லைக்கு அப்பால் உள்ள ஒரு வீட்டில் தனது தம்பி மாட்டிக்கொண்டதாகவும், அவனை மீட்க தான் செல்வதாக கூறுகிறான். ‘நீ அங்கு சென்றால் உன்னை கொன்றுவிடுவார்கள்’ என பாபி சிம்ஹா அந்த சிறுவனிடம் எச்சரிக்கிறார்.
பிறகு அந்த சிறுவனின் தம்பியை காப்பாற்றுவதற்க்காக உயிரைப் பணயம் வைத்து செல்லும் பாபி சிம்ஹாவுக்கு அங்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அது என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஈழத்தமிழர்களாக கெளதம் மேனனும், பாபி சிம்ஹாவும் நடித்துள்ளனர். வழக்கமாக ஆங்கிலமும் தமிழும் கலந்து பேசும் கெளதம் மேனன் இந்த படத்தில் ஈழத்தமிழ் பேசி அசத்தியுள்ளார். பாபி சிம்ஹாவும் சிறுவன் தருணும் இயல்பாக நடித்து அசத்தி உள்ளார்.
‘அமைதி’ என்ற உணர்வை மையமாக வைத்து இப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். திரைக்கதை, பின்னணி இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளன.
