“வாங்கின 25 லட்சத்தை இல்லை என்கிறரர் இயக்குநர் பாலா” – புலம்பும் பிதாமகன் தயாரிப்பாளர் துரை
வெகுஜனத்தை பொறுத்தவரை சினிமா என்பது கோடிகள் புரளும் ஒரு மாபெரும் சந்தை, அதில் உள்ளவர்கள் அனைவரும் ஏகபோக வாழ்க்கையை வாழும் மனிதர்கள் என்று தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஏறத்தாழ அதுவும் உண்மைதான், ஆனால் இந்த சினிமா போதையால் தன் வாழ்க்கையையே தொலைத்த நபர்களும் உண்டு.
இயக்குநர் பாலா, தமிழ் திரையுலக வரலாற்றில் தனித்துவத்திற்கு பெயர்பெற்ற ஒரு இயக்குநர். குறிப்பாக 2003ம் ஆண்டு வெளியான இவருடைய பிதாமகன் திரைப்படம் பெரிய அளவில் இன்று வரை பேசப்பட்டு வருகின்றது. சிறந்த நடிகருக்கான தேசிய விருது விக்ரமுக்கு கிடைத்தது உள்பட 11 விருதுகள் இந்த படத்திற்கு கிடைத்தது.
ஆனால் பல கோடிகள் செலவு செய்து படமெடுத்த தயாரிப்பாளர் இன்று படுத்தப்படுகையாக கிடக்கிறார் என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா?. தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இதுகுறித்து அவர் பேசியுள்ளார்.
V.A. துரை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாபா (இணை தயாரிப்பாளர்), கேப்டன் விஜயகாந்தின் கஜேந்திரா மற்றும் பாலாவின் பிதாமகன் உள்பட பல வெற்றி திரைப்படங்களை தயாரித்து வெளியிட்ட மாபெரும் தயாரிப்பாளர். ஆனால் சினிமாவில் பெரிய அளவில் பணம் புரளாததால் இன்று கேட்பாரற்று கிடக்கிறார்.
4.5 கோடி செலவில் பிதாமகன் படத்தை முடிப்பதாக கூறிவிட்டு பாலா 12 கோடி அந்த படத்திற்கு செலவு செய்ததாக கூறிய துரை அவர்கள் தான் பாலாவிற்கு வேறொரு படத்திற்காக முன்பணமாக கொடுத்த 25 லட்சத்தை இன்றுவரை அவர் திருப்பித்தரவில்லை என்றும், அதை கேட்டு அவர் அலுவலகத்திற்கு சென்றபோது தான் அந்த தொகையை வாங்கவில்லை என்று கூறி தன்னை வெளியில் விரட்டியதாகவும் கண்கலங்க கூறியுள்ளார் தயாரிப்பாளர் துறை.
நீரிழிவு நோயால் அவதிப்படும் தன்னை காப்பாற்ற வேண்டுகோள் விடுத்துள்ளார்.
