ஆர்.ஜே. பாலாஜியின் சிங்கப்பூர் சலூன்.. புதிய விதத்தில் ப்ரமோஷன் ரெடி பண்ணப்போறாங்கப்பா!

தனது குண்டக்க மண்டக்க பேச்சினால் அனைவரையும் கவர்ந்த ஒரு நடிகர் தான் ஆர் ஜே பாலாஜி. பண்பலையில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்த இவருக்கு முதல் முதலில் கிடைத்த திரைப்பட வாய்ப்பு தான் 2013ம் ஆண்டு சித்தார்த் மற்றும் சந்தானம் நடிப்பில் வெளியான தீயா வேலை செய்யணும் குமாரு என்ற திரைப்படம்.
அதன் பிறகு ஒரு சில படங்களில் அவர் நடித்து வந்த நிலையில், 2015ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் திரைப்படத்தில் தோஷி பாபா என்ற கதாபாத்திரம் இவருக்கு ஒரு திருப்புமுனை அளித்தது என்றே கூறலாம். இந்த படத்திற்காக இருமுறை இவர் சிறந்த காமெடியன் விருது வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வரும் இவர் கடந்த 2020ம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தின் மூலம் கதையின் நாயகனாகவும் இணை இயக்குனராகவும் அறிமுகமானார்.
அதன் பிறகு வீட்டில் விசேஷங்கள் என்ற திரைப்படத்தையும் இவர் இயக்கி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் தற்போது பாலாஜி நடித்துள்ளார்.
சிங்கப்பூர் சலூன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் ஒரு அப்டேட் இன்று முற்றிலும் வித்தியாசமான முறையில் அறிவிக்கப்பட உள்ளது. ஐபிஎல் தொடர்கள் தற்பொழுது பிரபலமாக நடந்து வரும் நிலையில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை அணிக்கு இன்று நடக்கும் இந்த கிரிக்கெட் போட்டியின் இடையே இந்த படம் குறித்த ஒரு அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு கேமியோ ரோல் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.