Connect with us

Health Tips in Tamil, Tamil Health Tips

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வரலாறு

vadapathrasayee temple in tamil

ஆன்மிகம்

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வரலாறு

ஊர் -ஸ்ரீவில்லிபுத்தூர்

மாவட்டம் -விருதுநகர்

மாநிலம் -தமிழ்நாடு

மூலவர் -வடபத்ரசாயி, ரங்கமன்னார்

தாயார் -ஆண்டாள் (கோதை நாச்சி)

தீர்த்தம் -திருமுக்குளம், கண்ணாடித் தீர்த்தம்

திருவிழா -ஆடிப்பூரத் திருவிழா 10 நாள் புரட்டாசி பெரிய பெருமாள் உற்சவம் 10 நாள் பங்குனி திருக்கல்யாண உற்சவம் 10 நாள் மார்கழி எண்ணெய் காப்பு திருநாள் கிருஷ்ணஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி ,தமிழ், ஆங்கில வருடப்பிறப்பு ,தீபாவளி, பொங்கல் ஆகிய விசேச நாட்களில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

திறக்கும் நேரம் -காலை 6 :30 மணி முதல் மதியம் 1 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை .விழா நாட்களில் நேரம் மாறுபடும்.

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 90 வது திவ்ய தேசம் ஆகும்.

தல வரலாறு:

கோதை நாச்சியார் நந்தவனத்தில் பறிக்கும் பூக்களை இறைவனுக்கு மாலையாக கட்டி முதலில் அதை தன் கூந்தலில் சூடி இறைவனுக்கு ஏற்ற பொருத்தம் உடையவளா தாம் என்பதை கண்ணாடியில் பார்த்து பின் மீண்டும் பூக்களை கலைத்து பூஜைக்கு கொடுத்து விடுவாள். பெரியாழ்வாரும் தினமும் இதையே இறைவனுக்கு சாத்துவார் .ஒரு நாள் மாலையில் தலைமுடி இருப்பதை கண்டு அஞ்சி, அதை தவிர்த்து விட்டு வேறு மலர்களை சூட்டினார் பெரியாழ்வார். இறைவன் கோதையின் கூந்தலில் சூடிய மாலையை தான் விரும்புவதாக ,அதையே எனக்கு சூட்டு என்றார்.

ஆழ்வாரும் கோதையை மானுடர் யாருக்கும் மணமுடிக்க சம்மதிக்காமல் இறைவனுக்காக காத்திருந்தார். கோதையும் இறைவனையே நினைத்து தொழுது இருந்தாள். இறைவன் தாம் கோதையை நேசிப்பதாகவும் தன்னை திருவரங்கத்திற்கு வந்து சந்திக்கச் சொல்லவே, கோதையும் பூப்பல்லக்கில் அங்கு சென்று இறைவனோடு ஐக்கியமானாள் .ஸ்ரீவில்லிபுத்தூரில் கோதையோடு சேர்ந்து எழுந்தருள வேண்டும் என்று பிரார்த்திக்க இறைவனும் அவ்வாறே எழுந்தருளியுள்ளார்.

vadapathrasayee temple in tamil

வைணவர்களின் முக்கிய தலமாக இக்கோயில் போற்றப்படுகிறது. மூலவர் வடபத்ரசாயி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் .மூலஸ்தானத்தில் விமலாக்ருதி விமானத்தின் கீழ் வட விருசத்தின் அடியில் அரவணைப் பள்ளியில் ஸ்ரீதேவி பூதேவி அடி வருட சயனக்கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார். இங்கு ஆண்டாள் 108 திவ்யதேசங்களில் அருளும் பெருமாள்களை மாலையாக அணிந்து இருப்பதாக ஐதீகம்.

இதனை நினைவு கூறும் விதமாக ஆண்டாள் கோயில் கருவறையைச் சுற்றி முதல் பிரகார சுவர்களில் 108 திவ்யதேச பெருமாளின் உருவங்கள் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. இதில் திருப்பாற்கடல் வைகுண்டம் பெருமாள் உட்பட அனைத்து பெருமாள்களையும் தரிசிக்கலாம். இத்தல த்தில் உள்ள வடபத்ரசாயி பெருமாளை தரிசனம் செய்ய பிரதான வாசல்கள் தவிர மேலும் இரண்டு வாசல்கள் இருக்கிறது. சுவாமியின் திருமுகம், திருப்பாதம் தரிசிக்க கருவறையில் இரண்டு பகுதிகளில் இரண்டு வாசல்கள் உள்ளன. ஆனால் சுவாமியை பிரதான வாசலில் இருந்தே முழுமையாக தரிசிக்கலாம் என்பதால் இவ்வாசல் வழியாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை.

ஆண்டாள் சன்னதிக்கு நேர் எதிரே வெண்கலத்தால் செய்யப்பட்ட தட்டொளி ஒன்று உள்ளது .கண்ணாடியை அக்காலத்தில் தட்டொளி என்று சொல்லியுள்ளனர் .இதில் தான் ஆண்டாள் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டாலும் .தற்போது பளபளப்பு குறைந்துள்ள இந்த கண்ணாடியை தான் ஆண்டாள் திருப்பாவையில் உக்கமும் தட்டொளியும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கார்த்திகை மாதத்தில் வரும் கவுசிக ஏகாதசியன்று ஆண்டாள், ரெங்கமன்னார் ,கருடாழ்வார் ஆகியோர் வடபத்ரசாயி சன்னதியில் உள்ள கோபால விலாசத்திற்கு எழுந்தருள்கின்றனர் .அப்போது இம்மூவருக்கும் 108 கம்பளிகள் போர்த்து கின்றனர். குளிர்காலம் என்பதால் இப்படி செய்வதாக சொல்லப்படுகிறது. பெண்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என உதாரணமாக திகழ்ந்தவள் ஆண்டாள்.

பெருமாள் மீது கொண்ட பக்தியால் அவரையே தன் கணவனாக அடைய விரும்பிய ஆண்டாள், பெருமாளை மணக்க வேண்டி மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்தால் .அவளுக்கு அருள் செய்த சுவாமி, பங்குனி உத்திரத்தில் திருமணம் செய்து கொண்டார் .ஆகவே பெண்கள் பாவை நோன்பு இருந்தால் விரும்பிய கணவனை அடையலாம் என்பது நம்பிக்கை.

ஆண்டாள் ரங்கமன்னார் கருடாழ்வார் மூவரும் ஒரே ஸ்தானத்தில் காட்சியளிப்பது இத்தலத்தில் மட்டுமே. இத்தலத்தின் கோபுரம்தான் தமிழக அரசின் சின்னமாக அமைந்துள்ளது. இங்குள்ள உற்சவர் பெருமாள் பேண்ட் ,சட்டை அணிந்தே காட்சி தருகிறார். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ரங்கமன்னார் சுவாமி வலது கையில் பெந்துகோல், இடக்கையில் செங்கோல், இடுப்பில் உடைவாளும் வைத்து ராஜ கோலத்தில் இருக்கிறார். இவர் காலில் செருப்பும் அணிந்திருப்பது விசேஷம்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் வசித்த பெரியாழ்வார் மதுரையில் நடந்த போட்டியில் பொற்கிழி பரிசு பெற்றார். அந்த சமயம் பெருமாள் கருட வாகனத்தில் தோன்றி இப்பரிசை கிடைக்கச் செய்தார் .இந்த காட்சியை அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கானோர் தரிசித்தனர். மக்களின் கண், பெருமாள் மீது பட்டு அவருக்கு திருஷ்டி ஏற்பட்டிருக்குமோ, அவருக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமோ என பெரியாழ்வார் அஞ்சினார். எனவே அவர் பல்லாண்டு வாழ வேண்டும் என கருதி,” பல்லாண்டு, பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்” என்று துவங்கி திருப்பல்லாண்டு பாடினார்.

இந்த உயர்ந்த பக்தியை மெச்சி பெருமாள் நீரே பக்தியில் பெரியவர் என வாழ்த்தினார். அதுவரையில் விஷ்ணு சித்தர் என்று அழைக்கப்பட்ட இவர் பெரியாழ்வார் என்னும் திருநாமம் பெற்றார். இந்தப் பல்லாண்டுப் பாடலே உலகம் முழுவதும் உள்ள திருமால் கோயில்களில் தினமும் பாடப்படுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் ஆடித் திருவிழாவின் ஏழாம் நாளில் ரங்கமன்னார் சுவாமி ஆண்டாளின் மடியில் சயனித்த கோலத்தில் காணலாம். இத்தலத்தில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது. இந்த தரிசனம் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது .தம்பதியரிடையே ஒற்றுமை வலுப்படும் என கூறப்படுகிறது.

ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பெருமாளை வேண்டி ,திருப்பாவை ,நாச்சியார் திருமொழி ஆகிய பிரபந்தங்களை இயற்றினார். இதில் திருப்பாவை 30 பாசுரங்களும் நாச்சியார் திருமொழி 143 பாசுரங்களும் உடையது.இத்தலத்தில் ஆண்டாள் கையில் வைப்பதற்காக தினமும் இலைகளால் கிளி செய்யப்படுகிறது. மாலையில் சாயரட்சை பூஜையின்போது இந்த கிளி ஆண்டாளுக்கு வைக்கப்படுகிறது. ஆண்டாள் மறுநாள் காலை வரையில் கையில் கிளியுடன் இருக்கிறாள்.

பின் இந்த கிளி பக்தர்களுக்கு கொடுக்கப்படுகிறது. கிளி சொன்னதைச் சொல்லும் தன்மையுடையது .ஆண்டாள் கண்ணனை மணக்க விரும்பிய தகவலை சொல்வதற்காக கிளியை தூது அனுப்பினாலும். ஆகவே ஆண்டாள் திருமணத்திற்கு உதவியதற்கு மரியாதை செய்யும்விதமாக கிளியை தன் இடக்கையில் வைத்திருக்கிறாள் .வியாசரின் மகனான சுகப்பிரம்மரிஷி ஆண்டாள் கையில் கிளியாக இருப்பதாகவும் சொல்வதுண்டு.

ஸ்ரீவில்லிபுத்தூர் என்ற பெயர் வர காரணம், ஸ்ரீ என்றால் லட்சுமி இவளே ஆண்டாளாக அவதாரம் எடுத்தாள். வில்லி என்பது இவ்வூரை ஆண்ட மன்னனின் பெயர். பாம்பு புற்று நிறைந்திருந்த பகுதியாக இருந்ததால் புத்தூர் என்றும் பெயர் வந்தது .பிற்காலத்தில் இவற்றை ஒன்றாக சேர்த்து ஸ்ரீவில்லிபுத்தூர் என்று அழைக்கப்பட்டது.

முகவரி: அருள்மிகு ஆண்டாள் திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் 626 125, விருதுநகர் மாவட்டம். தொலைபேசி எண் +91-4563-260-254.

மேலும் அனைத்து 108 திவ்ய தேசங்கள் வைணவத் தலங்களின் வரலாற்றை இங்கு அறிந்து கொள்ளலாம்.

More in ஆன்மிகம்

Advertisement
Advertisement
To Top