தி லெஜெண்ட் திரை விமர்சனம்
தி லெஜெண்ட் சரவணன் அருள் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள படம் தி லெஜெண்ட். மேலும் பிரபு, விஜயகுமார், விவேக், நாசர், யோகி பாபு, மயில்சாமி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
இரட்டை இயக்குனர்களான ஜே.டி – ஜெர்ரி இப்படத்தை இயக்கியுள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானியாக இருக்கும் சரவணன், பல சாதனைகளை செய்து உலகநாடுகளை அதிர வைக்கிறார். சொந்த ஊருக்கு செல்லும் சரவணன் தனது தாத்தா உருவாக்கிய கல்லூரியை எடுத்து நடத்துகிறார்.
தனது பள்ளி பருவ நண்பரான ரோபோ ஷங்கர் சர்க்கரை வியாதியால் அவதிப்பட்டு தீடீரென இறந்துபோகிறார். இதனையடுத்து இனி பிறக்கும் எந்த உயிருக்கும் சர்க்கரை வியாதி இருக்க கூடாது என முடிவெடுத்து நோய்க்கான தீர்வை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். இந்த முயற்சியில் சரவணன் வெற்றி கண்டாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஹீரோவாக களமிறங்கிய சரவணன் அருள் முதல் படத்திலேயே மக்களை கவரும் வண்ணம் நடித்துள்ளார். நகைச்சுவையால் மக்களை கவருகிறார் மறைந்த நடிகர் விவேக்.
முதல் பாதிக்கு விவேக், இரண்டாம் பாதிக்கு யோகி பாபு என ஆங்காங்கே சிரிக்க முயற்சித்திருக்கின்றனர்.வில்லனாக வரும் சுமன் வழக்கமான நடிப்பை கொடுத்துள்ளார்.
கதாநாயகிகளாக வரும் கீத்திகா திவாரி, ஊர்வசி ராவ்டேலாவின் நடிப்பு பெரிதாக கவரவில்லை. மேலும் யாஷிகா ஆனந்த், ராய் லக்ஷ்மி ஒரு பாடலுக்கு நடனமாடிவிட்டு செல்கின்றனர்.
நன்றாக நகரும் திரைக்கதையில் தேவையில்லாத பாடல்கள் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கிறது. பல காட்சிகளில் நிறைய சொதப்பல்கள் இருக்கிறது.
ஹாரிஸ் ஜெயராஜின் பின்னணி இசை மற்றும் வேல்ராஜின் ஒளிப்பதிவு அருமை. திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் ‘தி லெஜெண்ட்’ படத்திற்கு வெற்றி கிடைத்திருக்கும்.
மொத்தத்தில் ‘தி லெஜெண்ட்’ – 70, 80களிலேயே பார்த்து சலித்துப்போன படம்.
