நவரசா விமர்சனம் : அதர்வா முரளி நடித்த துணிந்த பின்
அதர்வா முரளி, அஞ்சலி இருவரும் இப்படத்தில் நடித்துள்ளனர். சர்ஜுன்.கே.எம் இப்படத்தை இயக்கியுள்ளார். சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். சுதர்ஷன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
அதர்வாவும், அஞ்சலியும் புதுமணத்தம்பதிகள். அதர்வா திருமணம் முடிந்த கையோடு ராணுவத்தில் சேருகிறார். அங்கு ஒரு காட்டுப் பகுதியில் நக்சலைட்டுக்கு எதிராக ராணுவ வீரர்கள் சண்டையிடுகிறார்கள். இதில் நக்சலைட் கும்பலைச் சேர்ந்த கிஷோர் பிடிபடுகிறார்.
குண்டடிபட்ட நிலையில் இருக்கும் கிஷோரை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார் அதர்வா. மருத்துவமனை 30கி.மீ தொலைவில் உள்ளதால் பயணத்தின் போது இருவரும் காணாமல் போய்விடுகின்றனர். இறுதியில் இருவரையும் கண்டுபிடித்தார்களா? அவர்கள் என்ன ஆனார்கள் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

ராணுவ வீரராக நடித்திருக்கும் அதர்வா கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார். நக்சலைட்டாக வரும் கிஷோர் தனது இயல்பாக நடித்திருக்கிறார். நடிப்பு திறமை உள்ள அஞ்சலிக்கு காட்சிகள் மிகவும் குறைவாகவே வைத்திருப்பது ஏமாற்றத்தை தருகிறது.
வீரம் என்ற உணர்வை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளனர். ஆனால் அந்த உணர்வை சரியாக வெளிப்படுத்தவில்லை. கதாபாத்திரங்கள் தேர்வு நன்றாக இருந்தாலும் திரைக்கதையில் வேகமில்லை.
