வாரிசு திரை விமர்சனம்
இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பொங்கலை முன்னிட்டு இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

மிகப்பெரிய தொழிலதிபரான சரத்குமாருக்கு ஸ்ரீகாந்த், ஷாம், விஜய் என மூன்று மகன்கள் உள்ளனர். இதில் விஜய் தன்னுடைய வாழ்க்கையை தன் விருப்பத்திற்கு வாழ வேண்டும் என நினைக்கிறார். இதனால் வீட்டைவிட்டு வெளியேறும் விஜய் அம்மாவின் அறுபதாம் கல்யாணத்திற்காக அவரின் வற்புறுத்தலால் வீட்டிற்கு வருகிறார்.
இதற்கிடையே சரத்குமாருக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. இதனால் சரத்குமாரின் கம்பெனி நிர்வாகப் பொறுப்பை விஜய் ஏற்கிறார். இது பிடிக்காமல் ஸ்ரீகாந்த், ஷாம், இருவரும் வீட்டைவிட்டு வெளியேறுகிறார்கள் . இன்னொருபுறம் தொழில் ரீதியாக விஜய் – பிரகாஷ்ராஜ் இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. இரண்டையும் விஜய் எப்படி சரிசெய்தார் என்பதே படத்தின் மீதிக்கதை.
விஜய் இப்படத்தில் ஆக்ஷன், சென்டிமென்ட், காதல், காமெடி என அவருடைய வழக்கமான ஆட்டத்தை ஆடியிருக்கிறார். முதல் பாதியில் அமைதியான அம்மா பாசம் கொண்ட விஜய்யையும் இரண்டாம் பாதியில் ஆக்ஷன், காமெடி, தந்தை பாசம் கொண்ட விஜய்யையும் பார்க்க முடிகிறது.
குடும்ப உறவுகளைப் பற்றிய ஒரு அழுத்தமான கதையை எடுத்துக் கொண்ட இயக்குனர் மனதில் பதியும்படி கொஞ்சம் ஆழமாக எடுத்திருக்கலாம். ‘ரஞ்சிதமே’ பாடலைத் தவிர ராஷ்மிகாவுக்கு படத்தில் பெரிய வேலையில்லை. படம் முழுவதும் ஒரே வீட்டை சுற்றியே நடப்பதால் சீரியல் பார்க்கும் உணர்வு வந்து போகிறது.
வில்லனாக பிரகாஷ்ராஜ், பல படங்களில் பார்த்த அதே நடிப்பை கொடுத்துள்ளார். யோகி பாபு அவ்வப்போது சிரிக்க வைக்கிறார். பிரபு, கணேஷ் வெங்கட்ராமன் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.
தமனின் பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார். பழனி கார்த்திக் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறது.
மொத்தத்தில் ஒரு ஃபேமிலி என்டர்டெய்னருக்கான அனைத்து அம்சங்களும் உள்ளது இந்த வாரிசு.
