பிச்சைக்காரன் 2 படம் வெளியிட அனுமதி.. இடையில் ஏற்பட்ட பிரச்சனை என்ன?

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இயக்கத்தில் அவர் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் திரைப்படம் தான் பிச்சைக்காரன் 2. மே மாதம் 19ம் தேதி இந்த படம் உலக அளவில் வெளியாகும் என்று சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
அன்றே இந்த படத்தின் டிரைலரும் வெளியானது, விஜய் ஆண்டனியுடன் இந்த திரைப்படத்தில் காவியா தப்பர் என்ற நாயகி நடித்துள்ளார். இந்த படத்தின் படபிடிப்பின் போது, விஜய் ஆண்டனி அவர்களுக்கு ஒரு சண்டைக் காட்சியில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டதும், அதன் பிறகு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2016ம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் படம் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றதை அடுத்து அந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் கதை தனது “ஆய்வுக்கூடம்” என்ற படத்தினுடைய கதை என்று கூறி, ராஜ கணபதி என்பவர் வழக்கு தொடர்ந்து, பட குழுவிடம் இருந்து நஷ்ட ஈடு கோரி இருந்தார்.
இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் பிச்சைக்காரன் 2 படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகுமா? என்ற சந்தேகம் இருந்து வந்தது. இந்நிலையில் பிச்சைக்காரன் 2 படத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, அந்த படத்தையும் குறிப்பிட்ட தேதியில் வெளியிட அனுமதி அளித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.