புதுடெல்லி: பண நெருக்கடி மற்றும் வங்கி அபராதங்கள் ஆகியவற்றால் பாதிக்கப்படும் சாமானிய மக்களுக்கு இன்றைக்கு நல்ல செய்தி! பொதுத்துறை வங்கியான கனரா வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி, இனி சேமிப்புக் கணக்கில் “குறைந்தபட்ச இருப்புத் தொகை” (Minimum Balance) வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றும், அதனை பராமரிக்காததற்காக விதிக்கப்படும் அபராதங்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன என்றும் வங்கி தெரிவித்துள்ளது.
இது இன்று (ஜூன் 2) முதல் அமலுக்கு வருகிறது.
இதுவரை இருந்த நிலை என்ன?
- நகர்ப்புற கிளைகள்: ₹2,000
- இரண்டாம் நிலை நகர்ப்புற கிளைகள்: ₹1,000
- கிராமப்புற கிளைகள்: ₹500
இவற்றை பராமரிக்க தவறினால், வாடிக்கையாளர்கள் அபராதம் செலுத்த வேண்டியிருந்தது.
யாருக்கு இதனால் பயன்?
இந்த முடிவால் அதிகமாக பாதிக்கப்பட்டு வந்த சாமானிய மக்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள், சிறிய ஊதியம் பெறும் பணியாளர்கள் போன்றோருக்கு பெரும் நிம்மதி கிடைக்கும்.
மாற்றுத்திறனாளி உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை போன்ற அரசு நலத்திட்ட பணிகள் வரும் வங்கிக் கணக்கிலிருந்து அபராதமாக வெட்டப்படுவதால், பலர் அவதிக்கு உள்ளாகி வந்தனர். இப்போது அதிலிருந்து விடுபட முடிகிறது.
கனரா வங்கி எடுத்த பெரிய தீர்மானம்
இந்த நடைமுறை மூலம், வங்கிச் சேவை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றுவதே கனரா வங்கியின் நோக்கம் என அதன் மேலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுத்துறை வங்கிகளில், மினிமம் பேலன்ஸ் அபராதத்தை ரத்து செய்த முதல் வங்கி கனரா வங்கியாக இந்த முடிவால் மாறியுள்ளது. இது மற்ற வங்கிகளுக்கும் வழிகாட்டியாக இருக்கும் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.