வங்கிகளில் கடன் வாங்குவோருக்கு பெரிய நிவாரணம் வழங்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வணிக நோக்கத்திற்காக தனிநபர்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அனைத்து கடன்களுக்கும் வணிக வங்கிகள், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், NBFC-UL, அகில இந்திய நிதி நிறுவனங்கள் ஆகியவை எந்தவிதமான முன்கூட்டியே பணம் செலுத்தும் கட்டணங்களையும் விதிக்கக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வணிகம் தவிர தனிநபர்களுக்கு வழங்கப்படும் அனைத்து கடன்களுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும். சிறு நிதி வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், மற்றும் சில கூட்டுறவு வங்கிகள் ரூ.50 லட்சம் வரை அனுமதிக்கப்பட்ட கடன்களுக்கு முன்கூட்டியே பணம் செலுத்தும் கட்டணம் எதுவும் விதிக்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
இத்தகைய கட்டணங்கள் விதிப்பது தொடர்பாக வங்கிகளுக்கு முன்பே வாடிக்கையாளர்கள் பல புகார்கள் அளித்திருந்தனர். தற்போது, RBI-யின் புதிய உத்தரவால் வங்கிகளில் கடன் வாங்கும் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பெரிய நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.