கறிவேப்பிலையின் மருத்துவ குணங்களும் அதன் பலன்களும்

சுவைக்காகவும் நறுமணத்துக்காகவும் கறிக்குச் சேர்க்கப்படும்  கறிவேப்பிலை பல  மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. சிலர் உணவு உண்ணும்போது கறியில் இருக்கும் கறிவேப்பிலையை எடுத்து வெளியில் போட்டுவிட்டு உண்பர்;
நல்லதொரு மூலிகை மருந்தைப் புறக்கணிக்க விரும்பின் அவ்வாறு செய்யலாம். கறிவேப்பிலையின் உயிரியற் பெயர் முறயா கொயனிகீ (Murraya koenigii). பேச்சு வழக்கில் இருக்கும் வேறு பெயர்கள்: கறுவேப்பிலை, கறுகப்பிலை,  கருவேப்பிலை.
கறிவேப்பிலையின் தோற்றம் வேம்பு இலையின் தோற்றத்தைப் போன்றே இருக்கும். அளவில் 2-4 செ,மீ நீளமும் 1-2 செ.மீ அகலமும் கொண்டதாக இருக்கும். இந்த இலைகள் தனித்தனி இலைகளாக அல்லாமல், கொத்து கொத்தாகவே காணப்படும்; ஒவ்வொரு கொத்திலும் 10-20 இலைகள் இருக்கும்.
கறிவேப்பிலைகள் உடைய மரத்தை “கறிவேப்பிலை மரம்” அல்லது “கறுவேம்பு மரம்” என்றழைக்கப்படும். இம்மரங்கள் அதிகம் உயரமானதாகவோ, பருமன் மிக்கதாகவோ அல்லாமல் சிறிய வகை மரங்களாகும். நான்கு முதல் ஆறு (4-6) மீட்டர் வரையிலான உயரம் கொண்டதாகவே இருக்கும்.
கறிவேப்பிலையில் உயிர்ச்சத்து  பி, பி2, ஏ, சி, சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளது.
ஆய்வு நிகழ்வுகள்
ஈரல் புற்றுநோய் உயிரணுக்களின் (HepG2) பெருக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றது என ஆய்வொன்று தெரியப்படுத்துகின்றது.
இதுமட்டுமல்லாது அக்குறிப்பிட்ட உயிரணுக்களில் ஏற்படக்கூடிய உயிரணு-தன்மடிவையும் (apoptosis) தூண்டுகின்றது. இதனால் ஹெப்ஜீ2 வகை புற்றுநோய்க் கலங்கள் அழிகின்றன. இது புற்றுநோயைக் கட்டுப்படுத்துகின்றது.
இதன் இந்தச் செயலுக்கு கறிவேப்பிலையில் உள்ள கிரினிம்பைன் (girinimbine) எனும் காரப்போலி (ஆல்க்கலாய்டு) காரணமாகும். ஆய்வாளர்கள் இதனை கறிவேப்பிலையில் இருந்து பிரித்தெடுத்து ஆய்வுகூடத்தில் வளர்ச்சியுறும் புற்றுநோய் உயிரணுக்களில் இதனைப் பரிசீலித்தனர். மனிதரில் இன்னமும் பரிசீலனை நடைபெறவில்லை.
ஆய்வுகூடத்தில் இசுத்ரேப்டோசோடோசின் (streptozotocin) எனும் வேதியற்பொருள் மூலம் இன்சுலின் சுரக்கும் உயிரணுக்கள் சேதப்படுத்தப்பட்ட எலிகள் இப்பரிசோதனைக்குப் பயன்பட்டன.
இவற்றில் இதன் மூலம் செயற்கையாக நீரிழிவு உருவாகியது. வாய் மூலம் கறிவேப்பிலையில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பதார்த்தம் முப்பது நாட்களுக்குத் தொடர்ச்சியாக வழங்கப்பட்டது.
எலியில் குருதி குளுக்கோசு, வெல்லமேற்றப்பட்ட ஈமோகுளோபின், யூரியா, யூரிக் அமிலம், கிரியடினைன் போன்றவை குறைந்து கொள்வது அவதானிக்கப்பட்டது.  கறிவேப்பிலை இன்சுலின் சுரப்பதைத் தூண்டுகின்றது என்பது இதன்மூலம் நிரூபணம் ஆகியது.
ஒட்சிசன் எமக்குத் தேவையான வாயு. இது இரு மூலக்கூறாகக் காணப்படுகிறது (O2), எமது உடம்பில் நிகழும் வேதியல் மாற்றங்களின் போது இது உடைபட்டு தனித்தனி உருபாக உருமாறுகிறது (oxygen radicals = O.).
இந்தத் தனி “O.” ஆனது வேறு வேதியல் பொருட்களுடன் சேரும் நிகழ்வு ஒட்சியேற்றம் என்கின்றோம். இதே ஒட்சியேற்றம் உதாரணமாக டி.என்.ஏயில் நடை பெற்றால் கலங்களின் அமைப்பு மாறுபடும் அதுவே புற்று நோயை வழிவகுக்க உதவும்.
இவ்வாறு உயிரணுக்கள் ஒட்சிசன் தனிஉருபால் பாதிப்படையாமல் இருக்க கறிவேப்பிலையில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பதார்த்தம் துணை புரிகின்றது. இதன் மூலம் இதய நோய், புற்றுநோய்கள், வாத நோய்கள், நீரிழிவு போன்றன கட்டுப்படுத்தப்படலாம்.
இந்த நோய்கள் அனைத்திலும் உயிரணுக்கள் ஒட்சிசன் தனிஉருபால் சேதமடைவது நிகழ்கின்றது. இது தற்போதைக்கு ஏட்டளவில் மட்டுமே சாத்தியமாக உள்ளது, இதற்குரிய விரிவான ஆய்வுகள் நடைபெறவில்லை.
மருத்துவ குணங்கள்
  • புற்றுநோயைத் தடுக்கவல்லது எனக் கருதப்படுகின்றது.
  • நீரிழிவு நோயை கறிவேப்பிலை கட்டுப்படுத்துகின்றது.
  • இதய நோயைக் (தமனிக்கூழ்மைத் தடிப்பு) குணமாக்கின்றது.
  • வாய்புண்ணைக் குணப்படுத்தும்; பல் ஈறு வலுவாகும்.
  • வயிற்று உபாதைகள்: சமிபாடின்மை, மலச்சிக்கல் போன்றவற்றைப் போக்கும்.
  • சுக்கிலம் விருத்தியடைய உதவும்.

 

பயன்படுத்தல் முறைகள்
இவை செவி வழிவந்த மருத்துவக் குறிப்புகளாகும். இவற்றின் உண்மைத் தன்மை பரிசீலனைக்குரியது.
வெறும் வயிற்றில் தினமும் கறிவேப்பிலை இலை மென்று சாப்பிட வேண்டும். நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை, மாலையில் 10 இலை மென்று சாப்பிடலாம் அல்லது கறிவேப்பிலையை நிழலில் நன்றாக உலர்த்தி காயவைத்து பொடிப் பொடியாக ஆக்கி கசாயம் செய்து காலை மற்றும் மாலை அருந்தி வந்தால் உடலில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்கலாம். 3 மாதம் சாப்பிட நீரிழிவால் உடல் பருமனாவது தவிர்க்கப்படும்.
இளம் வயதில் நரையைத் தடுக்க கறிவேப்பிலை பயன்தரும். அதுமட்டுமல்லாது நரை முடி வந்தவர்களும் உணவிலும் தனியாகவும் கறிவேப்பிலையை அதிகமாக சாப்பிட்டு வந்தால் நரைமுடி நீங்க சாத்தியக்கூறுகள் உண்டு.
கறிவேப்பிலையை தினமும் உணவில் சேர்த்து வந்தாலோ அல்லது தலையில் தேய்க்கும் எண்ணெயில் போட்டு நன்றாக காய்ச்சி ஆறவைத்து அதை தினமும் தலையில் தேய்த்து வந்தாலோ இளநரை மாறும்.
கறிவேப்பிலையை நன்றாக சுத்தம் செய்துவிட்டு நீரில் அலசி அதனுடன் சிறிதளவு சின்ன வெங்காயம், இஞ்சி, சீரகம், 2 பூண்டு பல், புதினா அல்லது கொத்தமல்லியை கலந்து நன்றாக அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழத்தை பிழிந்து நன்கு கலக்கி மதியஉணவில் சாதத்தோடு கலந்து உண்டு வந்தால் மன உளைச்சல், மன இறுக்கம், மன அழுத்தம் குறைந்து மனநிலை சீராகும் மாறும். உடல் புத்துணர்வு பெரும்.
கறிவேப்பிலை குமட்டல், சீதபேதியால் வரும் வயிற்று உழைவு, நாட்பட்ட காய்ச்சல் நீங்கும். இக்கறிவேப்பிலையால் பித்த மிகுதியால் வந்த பைத்திய நோய்களும் விலகுவதாகச் ‘சித்தர் வாசுட நூலில்’ உள்ளன.
இதன் இலை, பட்டை, வேர் இவைகளை கசாயம் செய்து கொடுத்தால் பித்தம், வாந்தி நீங்கும்.
நிழலில் உலர்த்திய கறிவேப்பிலையை இத்துடன் மிளகு, உப்பு, சீரகம், சுக்கு முதலியவற்றை பொடியாக்கி சோற்றுடன் நெய் கலந்து சாப்பிட, மந்த பேதி, மலதோஷம், மலக்கட்டு, கிரகனி, கழிச்சல்நோய், பிரமேகட்டு நோய்கள் குணமாகும்.
கறிவேப்பிலையுடன் சுட்ட புளி, வறுத்த உப்பு, வறுத்த மிளகாய் சேர்த்து துவையல் செய்து சாப்பிட குடலுக்கு பலத்தைக் கொடுக்கும்.
கறிவேப்பிலை ஈர்க்கின் முலைப்பாலிட்டு இடித்து சாறு பிழிந்து கிராம்பு, திப்பிலி சேர்த்து மூன்றுமுறை குழந்தைகளுக்கு ஊட்ட வாந்தி நிற்கும். பசி மற்றும் உணவு உண்ணும் வேட்கை மிகுதிப்படும்.
கறிவேப்பிலையை மிளகு, சீரகம், சுக்கு என்பனவற்றுடன் சேர்த்து வறுத்து அதனைப் பொடியாக்கி உப்புச் சேர்த்து சோற்றுடன் உண்ணவும் பசி மிகைப்படும்.

What do you think?

20 points
Upvote Downvote

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

யோகத்தின் எட்டு நிலைகள் (அட்டாங்க யோகம்)

மோதிர விரலில் தங்கம் மோதிரம் அனிவது ஏன்?