அன்பறிவு திரை விமர்சனம்
ஹிப் ஹாப் தமிழா ஆதி, நெப்போலியன், விதார்த், காஷ்மீரா, சாய்குமார் உள்ளிட்ட பலர் நடித்து OTTயில் வெளியாகியுள்ள படம்தான் அன்பறிவு. அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த அஸ்வின் ராம் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஹிப் ஹாப் தமிழா ஆதி படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மதுரையில் உள்ள ஒரு கிராமத்தில் நெப்போலியன் மக்கள் செல்வாக்கோடு வாழ்ந்து வருகிறார். அவரிடம் விதார்த் உதவியாளராக பணிபுரிகிறார். அரசியலில் தனக்கு பதவி கிடைக்க வேண்டும் என ஆசைப்படுகிறார். இதனிடையே விதார்த்தின் நண்பர் சாய் குமார் நெப்போலியன் மகளை திருமணம் செய்து கொள்கிறார். அவர்களுக்கு இரட்டை குழந்தை பிறக்கிறது.
இந்நிலையில் விதார்த்துக்கு கிடைக்க வேண்டிய பதவி நெப்போலியனின் மருமகன் சாய் குமாருக்கு கிடைக்கிறது. இதனால் ஆத்திரம் அடையும் விதார்த் நெப்போலியனின் குடும்பத்தை சதி செய்து பிரிக்கிறார். இதனால் நெப்போலியனின் பேரன்கள் இருவரும் குழந்தையாக இருக்கும் போதே பிரிகிறார்கள்.
ஒரு குழந்தை மதுரையில் அம்மாவிடம் வளருகிறது. இன்னொரு குழந்தை கனடாவில் அப்பாவிடம் வளர்கிறது. இறுதியில் பிரிந்து போன குடும்பம் ஒன்று சேர்ந்ததா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை.
ஹிப்ஹாப் தமிழா அன்பு, அறிவு என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதில் அன்பு கதாபாத்திரம் மெர்சல் படத்தில் வரும் விஜய் நினைவுபடுத்துகிறது. படத்தில் இரண்டு கதாநாயகிகள் இருந்தாலும் இவர்களுக்கான காட்சி குறைவு தான்.
நெப்போலியன் தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வில்லனாக வரும் விதார்த் வழக்கமான படங்களை விட இந்த படத்தில் ஒரு முன்னேற்றம் தெரிகிறது. ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை படத்திற்கு பொருந்துகிறது.
அன்புதான் அறிவு என்ற ஒரு கருத்தை சொல்ல முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் அஸ்வின் ராம். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ‘அனைவரும் சமம்’ என்பதை சொல்லும் விதம் அற்புதம்.
மொத்தத்தில் அன்பறிவு – அன்பு, அறிவு இரண்டுமே முக்கியம் என்பதை உணர்த்துகிறது.
