Search
Search

தந்தை மகள் பாசத்தை உணர்த்தும் அன்பிற்கினியாள் – திரை விமர்சனம்

அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜாவித் ரியாஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். கோகுல் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘ஹெலன்’ படத்தைத் தமிழில் ரீமேக் செய்துள்ளார் இயக்குநர் கோகுல். ‘ரௌத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’, ‘ஜுங்கா’ படங்களுக்குப் பிறகு அவர் இயக்கிய ஐந்தாவது படம். ரீமேக் படம் என்றாலும், தமிழில் சரியான திரைக்கதையை கொடுத்திருக்கிறார் இயக்குனர் கோகுல்.

அருண் பாண்டியன் எல்.ஐ.சி. ஏஜெண்டாகப் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகள் கீர்த்தி பாண்டியன் (அன்பிற்கினியாள்) ஒரு சிக்கன் ஹப் ஸ்டாலில் பணிபுரிகிறார். வேலை பார்த்துக்கொண்டே நர்ஸிங் படித்து கனடா செல்ல முயற்சி செய்து வருகிறார்.

கீர்த்தி பாண்டிக்கு தாய் இல்லாததால் தந்தையான அருண்பாண்டியனின் அதீத பாசத்தில் வளர்கிறார். இதற்கிடையில் கீர்த்தி பாண்டியன் தனது தந்தைக்கு தெரியாமல் பிரவீன் ராஜை காதலிக்கிறார்.

ஒரு நாள் பிரவீன் ராஜும் கீர்த்தி பாண்டியனும் இரவு நேரத்தில் பைக்கில் செல்லும் போது போலீசிடம் மாட்டிக்கொள்கிறார்கள். இதனால் இவர்களின் காதல் விஷயம் அருண் பாண்டியனுக்கு தெரிய வருகிறது.

மனக்கவலையில் இருக்கும் கீர்த்தி எதிர்பாராத விதமாக சிக்கன் பதப்படுத்தப்படும் குளிர்சாதன அறையில் மாட்டிக்கொள்கிறார். இரவு நெடுநேரமாகியும் வீட்டிற்கு வராததால், கீர்த்தியை தேடி அலைகிறார் அருண்பாண்டியன். இறுதியில் கீர்த்தி கிடைத்தாரா இல்லையா..? தந்தை மகளின் பாசப்போராட்டம் ஜெயித்ததா இல்லையா,.? கீர்த்தியின் காதலை ஏற்றுக் கொண்டாரா இல்லையா..? என்பதே படத்தின் மீதிக் கதை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அருண் பாண்டியன் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். எதுவானாலும் தந்தையிடம் சொல்லக்கூடிய அளவிற்கு மிகவும் நட்பான பாசத்தில் வளர்கிறார் கீர்த்தி பாண்டியன்.

அருண் பாண்டியன் தனது மகள் மீதான பாசத்தையும், காணாமல் போன பிறகு ஏற்படும் தவிப்பையும் தன்னுடைய அனுபவ நடிப்பால் உணர வைக்கிறார். கீர்த்தி பாண்டியன் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து முழுமையான பங்களிப்பை கொடுத்து இருக்கிறார்.

கீர்த்தி பாண்டியனின் காதலனாக வரும் பிரவீன் ராஜ் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். ஜாவித் ரியாஸின் இசை படத்திற்கு பெரிய பலம். மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு அருமை. குறிப்பாக குளிரூட்டும் அறையை வெவ்வேறு கோணங்களில் காட்டி கவனிக்க வைக்கிறார்.

அன்பிற்கினியாள் – பேரன்பு

You May Also Like