கேரளா காங்கிரஸ் கட்சியின் தலைவர் காலமானார்

கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், எர்ணாகுளம் மாவட்டம் திருக்காக்கரா தொகுதி எம்எல்ஏவுமான பி.டி.தாமஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் குணமடைந்து திரும்பி வருவார் என அனைவரும் நினைத்திருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

பி.டி.தாமஸ் 1991 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தொடுபுழா தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 முதல் 2014 வரை இடுக்கி தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.
காங்கிரஸின் துடிப்பான, வெளிப்படையான தலைவராக இருந்தவர் பி.டி.தாமஸ். தற்போதைய பினராயி விஜயன் தலைமையிலான அரசை தொடர்ந்து தாக்கி, அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கேரள சட்டசபையில் அவர் ஆற்றிய உரைகள் கூர்ந்து கவனிக்கப்பட்டன.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி , அவரது மறைவு செய்தி கேட்டு வருத்தமடைந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் கேரள ஆளுநர் ஆரீஃப் முகமது கான் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.