‘காரி’ திரை விமர்சனம்

சசிகுமார், ஆடுகளம் நரேன், பார்வதி அருண், பிரேம் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் காரி. ஹேமந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காரியூர், சிவனேந்தல் என இரண்டு கிராமங்களுக்கும் பொதுவாக கருப்பன் கோவில் உள்ளது. இந்த கோவில் நிர்வாகத்தை யார் நடத்துவது என மோதல் இருந்து வருகிறது.
இதற்கு தீர்வு காண அங்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. அந்த போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் தான் கோவில் நிர்வாகத்தை நடத்த வேண்டும் என முடிவு செய்யப்படுகிறது.
இதற்காக சென்னையில் குதிரை ஜாக்கியாக இருக்கும் சசிகுமார் கிராமத்திற்கு வருகிறார். இறுதியில் யார் வெற்றி பெற்றார்கள்? கோவில் நிர்வாகம் எந்த கிராமத்திற்கு சென்றது? என்பதை படத்தின் மீதி கதை.
சசிகுமார் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சரியாக செய்துள்ளார். கதாநாயகி பார்வதி அருண் கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் சிறப்பாகவே நடித்துள்ளார்.
பார்வதியின் அப்பாவாக பாலாஜி சக்திவேல், கதாநாயகன் சசிகுமாரின் அப்பாவாக ஆடுகளம் நரேன், ஊர் பெரியவராக நாகி நீடு அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.
அம்மு அபிராமி, ராம்குமார், ரெடின் கிங்ஸ்லி சில காட்சிகளில் வந்து போகிறார்கள்.
மண்வாசம் மாறாத அழகான கிராமத்து கதையை சிறப்பாகவே கையாண்டு உள்ளார் இயக்குனர் ஹேமந்த்.
இமானின் பின்னணி இசை, கேமரா ஒர்க், எடிட்டிங் என அனைத்தும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
ஜல்லிக்கட்டு போட்டியால் ஊருக்கும், காளைகளுக்கும் கிடைக்க கூடிய நன்மைகளை மிக விளக்கமாக சொல்லியிருக்கிறது இந்த காரி.