மிக பிரம்மாண்டமாய் ஒரு இசை வெளியீட்டு விழா.. தயாராகும் மாமன்னன் படக்குழு!

இயக்குநர் மாரி செல்வராஜின் கனவு திரைப்படமான மாமன்னன் மிக நேர்த்தியான முறையில் உருவாகியுள்ளது என்று தான் கூற வேண்டும். பிரபல நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், பாஹத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
மேலும் இந்த படத்தில் ஒரு அற்புதமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் வைகை புயல் வடிவேலு. இந்த படத்தினுடைய அறிவிப்பு வெளியான நாள் முதல் ஒவ்வொரு நாளும் பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது.
குறிப்பாக இந்த படத்தில் இருந்து அவ்வப்போது வெளியாகும் போஸ்டர்கள், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்று தான் கூற வேண்டும். பல வருட இடைவெளிக்கு பிறகு முற்றிலும் வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் வடிவேலு அவர்கள் நடித்துள்ளார்.
அதேபோல உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தற்பொழுது அரசியலில் முழு நேரம் ஈடுபட்டு வருவதால் மாமன்னன் திரைப்படம் தான் அவர் இறுதியாக நடிக்கும் திரைப்படம் என்றும் அவ்வப்போது கூறப்பட்டு வருகிறது.
இசை புயல் ஏ.ஆர் ரகுமான் அவர்கள் இந்த படத்திற்கு இசையமைப்பது இந்த படத்தின் ஒரு கூடுதல் பலமாக கருதப்படும் நிலையில், முதல் முறையாக ஏ.ஆர் ரகுமான் இசையில் வைகைப்புயல் அவர்கள் ஒரு பாடலையும் மாமன்னன் படத்திற்காக பாடி உள்ளார்.
இந்நிலையில் வருகிற ஜூன் 1ம் தேதி சென்னையில் மிக பிரம்மாண்டமான முறையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்க உள்ளதாகவும் இதில் தமிழ் சினிமாவின் மாபெரும் தூண்களான உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்த இசை வெளியீட்டு விழாவிற்காக மாமன்னன் படகு குழு மிக நேர்த்தியான முறையில் தயாராகி வருகிறது என்றும் கூறப்படுகிறது.