சோழர்கள் பெயரை இப்படியும் சொல்லலாமா?.. கொஞ்சும் தமிழில் பேசிய அமெரிக்கர்கள்!

பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை ஏப்ரல் 28ம் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது. மிகப்பெரிய பொருட்செலவில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது என்பது ஒருபுறம் இருந்தாலும், இந்த படத்திற்கான பிரமோஷன் பணிகள் இதுவரை எந்த தமிழ் திரைப்படத்திற்கும் செய்யாத அளவுக்கு மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடந்து வருகின்றது.
சில தினங்களுக்கு முன்பு சென்னையில் துவங்கிய இந்த பிரமோஷன் பணிகள் தற்பொழுது மீண்டும் சென்னையில் முடிவடைய உள்ளது. இதற்கிடையில் மும்பை, டெல்லி, பெங்களூரு, கொச்சின், திருச்சி மற்றும் கோவை உள்ளிட்ட பல நகரங்களில் பொன்னியின் செல்வன் படத்தைச் சேர்ந்த படக் குழுவினர் பங்கேற்று பிரமோஷன் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இது மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா வரலாற்றில் முதல் முதலில் 4D தொழில்நுட்பத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ள முதல் திரைப்படமும் பொன்னியின் செல்வன் 2 தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று ஏப்ரல் 27ம் தேதி அமெரிக்காவில் PS 2 முன்னோட்ட காட்சி ஒன்று ஒளிபரப்பப்பட உள்ளது. இந்நிலையில் அமெரிக்கர்கள், சோழர்களின் பெயர்களை உச்சரித்தால் எப்படி இருக்கும் என்பதை ஒரு காணொளியாக எடுத்து வெளியிட்டுள்ளது இந்த படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ்.
ஒவ்வொரு அமெரிக்கர்களும் வந்தியத்தேவன், குந்தவை, பழுவேட்டரையர் என்று சோழர்களின் பெயர்களை கொஞ்சி கொஞ்சி பேசும் வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.