நீண்ட நேரம் மாஸ்க் அணிவதால் ஏற்படும் சரும பிரச்சனைகள்

கொரோனாவிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள மாஸ்க், சானிடைசர் பயன்படுத்துவது அவசியமாகிவிட்டது. ஆனால் இதை நீண்ட நேரம் பயன்படுத்தினால் பிரச்சனை உருவாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை பார்க்கலாம்.

கொரோனா வைரஸிடமிருந்து தற்காத்துக்கொள்ள முக கவசம் அணிய வேண்டியது அவசியமாகிவிட்டது. இறுக்கமான முகக்கவசங்களை நீண்ட நேரம் அணிவதால் சருமத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. சருமம் எரிச்சல், சொறி ஏற்படுதல் போன்ற பிரச்சனைகள் உருவாகிறது.

முகக்கவசம் அணியும்போது வெளியேறும் வியர்வை அப்படியே அதில் படிந்து விடுகிறது. இதனால் சரும பிரச்சனைகள் உருவாகிறது. இதனைத் தடுக்க வீட்டிற்கு வந்தவுடன் முகத்தை நன்றாக சுத்தம் செய்து, சுடு நீரில் ஆவி பிடிக்க வேண்டும். இதனால் சருமத் துளைகளில் படிந்திருக்கும் அழுக்குகளை வெளியேற்றும்.

Advertisement

முக கவசம் அணிந்து இருந்தாலும் வெளியே செல்லும்போது சன் ஸ்கிரீன் தடவுவது நல்லது. இது சருமம் வறட்சி ஆகாமல் பார்த்துக் கொள்ளும். வைரஸ் கிருமி பரவுவதை தடுக்க கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

ஆல்கஹால் கலந்த சானிடைசர் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. சானிடைசர் கைகளில் தடவியதும் உடனே உலர்ந்து விடும் என்பதால் பெரும்பாலும் சானிடைசர்களை விரும்புகின்றனர். இதனால் சானிடைசர் பயன்பாடு அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

சானிடைசர் பயன்படுத்துவதைவிட சோப்பு போட்டு கை கழுவுவது நல்லது. ஏனென்றால் சானிடைசரில் உள்ள ஆல்கஹால் வைரஸை கொல்வது மட்டுமல்லாமல் கைகளில் ஆரோக்கியத்தை பராமரிக்கும் நல்ல பாக்டீரியாக்களையும் கொல்லும் தன்மை கொண்டது. இதனை தொடர்ந்து பயன்படுத்தும்போது வறட்சி ஏற்படுகிறது. சரும செல்கள் உதிரும் பிரச்சனை உருவாகிறது.

எனவே வெளியே சென்று வீடு திரும்பிய பிறகு முக கவசத்தையும் முகத்தையும் நன்றாக கழுவ வேண்டும். சனிடைசர் பயன்படுத்துவதை குறைத்துவிட்டு சோப்பு போட்டு கைகளை நன்றாக கழுவுவது நல்லது. இதனால் உங்கள் சருமம் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்.

முகக்கவசம் அணியும்போது பின்பற்ற வேண்டிய விஷயங்கள்:

ஒருமுறை பயன்படுத்திய முகக்கவசங்களை நன்றாக சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் தயாரிப்பதும் சிறந்தது.

தாடை மற்றும் மூக்குப் பகுதி முழுவதும் மூடியிருக்கும் வகையில், முகக்கவசத்தை தயாரித்திருக்க வேண்டும். தளர்வாக இல்லாமல், சரியான அளவில் தயாரித்திருக்க வேண்டும்.

முகத்தின் அனைத்து பகுதியையும் இறுக்கமாக மூடியிருக்க வேண்டும்.

ஒரு முறை முகக்கவசத்தை அணிந்துவிட்டால், அதனை அடிக்கடி கழற்றி மாட்டக்கூடாது. மேலும், அதனை அவ்வப்போது தொட்டுக் கொண்டே இருக்கவும் கூடாது.

முகக்கவசத்தை கழற்றியதும் சோப்பு கொண்டு 20 விநாடிகள் கைகளை கழுவ வேண்டியது அவசியம். ஒரு அடுக்கு கொண்ட முகக்கவசங்களை மீண்டும் உபயோகிக்கக்கூடாது.