கோடை காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்

வெயில் காலத்தில் நமது உடலை பாதுகாக்க வேண்டியது அவசியம். தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும். உடல் சூட்டை தணிக்க இளநீர், மோர் அடிக்கடி பருகலாம். கடைகளில் விற்கும் குளிர்பானங்களை தவிர்த்துவிடுங்கள். அதற்குப்பதிலாக வீட்டிலேயே ஜூஸ் தயாரித்து குடிக்கலாம்.
 
கிரீன் டீயில் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் கிரீன் டீ அருந்த வேண்டும்.
 
ரோஜா இதழ்களை இளநீர் விட்டு மையாக அரைத்து முகத்தில் தடவினால் வறண்டு போன உங்கள் சருமம் மென்மையாகும்.
 
கோடை காலங்களில் குறைந்த கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை சாப்பிடுவது நல்லது.
 
வெள்ளரிக்காயை அதிகம் சாப்பிடுங்கள். வெள்ளரிக்காயில் 93 சதவீதம் நீர்ச்சத்து உள்ளதால் உடலில் இருந்து வெளியேறும் நீர்சத்தை சரிசெய்யும்.
 
வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். இரவில் சிறிது வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் பருகினால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

நீராகாரம் ஒரு அருமையான இயற்கையான பானம். காலையில் ஒரு டம்ளரும், டிபன் சாப்பிட்ட பின் ஒரு டம்ளரும் அருந்தலாம். இதை விட உடலைக் குளிர்ச்சியாக வைக்கக்கூடியது எதுவுமே இல்லை .

மதிய உணவில், எண்ணெயில் பொரித்த உணவு வகை, காரம் தவிர்க்கவும். வெஜிடபிள் சாலட் (வெள்ளரிக்காய், வெங்காயம், தக்காளி, முளைவிட்ட பயறு வெந்தயம் சேர்த்தது) அவசியம் சேர்க்க வேண்டும். கருப்பஞ்சாது கோடைக்கு ஏற்றது.

கடும் வெயிலில் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால் சின்ன வெங்காயம் 4 பச்சையாகச் சாப்பிட்டு விட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து, பின் செல்ல வேண்டும்.

வெயில் காலம் முழுவதும் ஜன்னல், கதவு, திரைச்சீலைகள் பச்சை அல்லது நீலவண்ணத்தில் இருக்க வேண்டும். நுங்குகளை வாங்கி உரித்துக் கைகளால் பிசைந்து சர்க்கரை, பால், ஏலக்காய்ச் சேர்த்து பிரிட்ஜில் வைத்துச் சாப்பிட அருமையாக இருக்கும்.

மண் பானை நீரையே குடிக்கத் தேர்ந்தெடுங்கள். துளசி இலை, வெட்டி வேர் சிறிது துணியில் முடிந்து பானை நீரில் போட்டு அருந்துங்கள்.

முகத்தில், உடலில், ஜில்லென்று பன்னீர் தெளித்து, சந்தனத்தைப் பூசிக் கொண்டு இரவில் தூங்கி விட்டுக் காலையில் எழுந்தால் நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும்.

வெயில் காலத்தில் சூட்டினால் வரும் வயிற்று வலிக்கு 2 ஸ்பூன் சோயாவை மிக்ஸியில் அரைத்து, கொதிக்க வைத்த பாலில் கலந்து சிறிது சர்க்கரை சேர்த்துச் சாப்பிட வலி நிற்கும். தொண்டைக்கும் இதம் தரும்.

குழந்தைகளை வெளியில் (வெயிலில்) விளையாட விடாமல் கேரம், டிரேட், செஸ் போன்ற இண்டோர் கேம்ஸ் ஈடுபடுத்தலாம்.

இரண்டு, மூன்று பனை விசிறிகள், வெட்டி வேர் விசிறிகள் இருந்தால் நல்லது. அதில் நீர் தெளித்து விசிறினால் கரண்ட் இல்லாத நேரத்தில் குளிர்ந்த காற்று வரும்.

பயறு, சந்தனம், கஸ்தூரி மஞ்சள், வெட்டி வேர், எலுமிச்சை, காய்ந்த ஆரஞ்சுப் பழ தோல் அரைத்த நலுங்கு மாவு பொடியைப் பயன்படுத்தலாம். இதனால் வேனல் கட்டி, அரிப்பு, வியர்க்குரு போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

தலைக்கு ஆயில் மசாஜ் அவசியம். 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய், அரை ஸ்பூன் தேங்காய் எண்ணெய், கால் டீஸ்பூன் விளக்கெண்ணெய் கலந்து லேசாகச் சூடு செய்து மசாஜ் செய்த பிறகு, வெந்தயம், சீயக்காய் ஊற வைத்து நன்கு அரைத்து, தலைக்கு உபயோகப்படுத்தினால் சூடு குறையும். உடல் குளிர்ச்சி பெறும்.

Recent Post